எல்லோரும் சிறப்பாக ஆடுவதால் யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது? என்பது இனி தலைவலி தான் - இந்திய கேப்டன் கோலி


எல்லோரும் சிறப்பாக ஆடுவதால் யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது? என்பது இனி தலைவலி தான் - இந்திய கேப்டன் கோலி
x
தினத்தந்தி 30 Jun 2018 11:00 PM GMT (Updated: 30 Jun 2018 8:48 PM GMT)

எல்லோரும் சிறப்பாக ஆடுவதால் யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது? என்பது இனி தலைவலி தான் என இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

டப்ளின்,

டப்ளின் நகரில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் (70 ரன்), சுரேஷ் ரெய்னாவின் (69 ரன்) அரைசதத்தின் உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 214 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய அயர்லாந்து 12.3 ஓவர்களில் 70 ரன்களில் சுருண்டது.

தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களுக்கு தேவையான வெற்றி வேட்கை, உத்வேகம் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளது. இரண்டு ஆட்டங்களிலும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சீரான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தியது திருப்தி அளிக்கிறது. ஆனால் இப்போது தான் யாரை ஆடும் லெவன் அணியில் சேர்ப்பது, யாரை நீக்குவது என்ற தலைவலி எனக்கு ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான ஒரு அறிகுறியே. இளம் வீரர்கள் தங்களுக்குரிய வாய்ப்பை பயன்படுத்தி அசத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போல் வெளியே இருக்கும் வீரர்களும் வாய்ப்பு கிடைக்கும் போது ஜொலிக்கிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த காலக்கட்டமாகும்.

அடுத்து வரும் இங்கிலாந்து தொடர் குறித்து கேட்கிறீர்கள். இங்கிலாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தால், நம்மிடமும் பேட்டிங்கில் மிரட்ட வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி வீசும் சுழற்பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இருப்பது சாதகமான அம்சமாகும். இங்கிலாந்து தொடர் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் வருகிற 3-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

Next Story