இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: புஜாராவின் சதத்தால் முன்னிலை பெற்றது இந்தியா 273 ரன்களில் ஆல்-அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: புஜாராவின் சதத்தால் முன்னிலை பெற்றது இந்தியா 273 ரன்களில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 31 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-09-01T02:13:18+05:30)

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. புஜாரா சதம் அடித்து அணியின் முன்னிலைக்கு வித்திட்டார்.

சவுதம்டன், 

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. புஜாரா சதம் அடித்து அணியின் முன்னிலைக்கு வித்திட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 86 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மொயீன் அலி (40 ரன்), சாம் குர்ரன் (78 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து கவுரவமான நிலையை எட்டியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (19 ரன்), ஷிகர் தவான் (23 ரன்) இருவரும் ஸ்டூவர்ட் பிராட்டின் வேகத்தில் வீழ்ந்தனர்.

ரஹானே அவுட்டில் சர்ச்சை

இதைத் தொடர்ந்து புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 142 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்ததை பார்த்த போது எளிதில் 300 ரன்களை கடக்கும் போலவே தோன்றியது. ஆனால் இந்த கூட்டணி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. சாம் குர்ரனின் பந்து வீச்சில் வெளியே சென்ற பந்தை விராட் கோலி (46 ரன், 71 பந்து, 6 பவுண்டரி) அடித்த போது அது பேட்டில் உரசிக்கொண்டு ஸ்லிப்பில் நின்ற அலஸ்டர் குக்கின் கையில் கேட்ச்சாக விழுந்தது.

அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே (11 ரன்), சர்ச்சைக்குரிய முறையில் பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை லேசாக தாக்குவது தெரிந்தது. ஆனால் பென் ஸ்டோக்ஸ், தனது காலை ஏறக்குறைய கோட்டை விட்டு வெளியே வைத்து வீசுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ‘நோ-பால்’ வழங்கியிருக்கலாம். ஆனால் நடுவர் இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்டார்.

புஜாரா சதம்

இதன் பின்னர் ஒரு பக்கம் புஜாரா போராட, மறுபக்கம் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி இடைவிடாது குடைச்சல் கொடுத்தார். 29 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காத விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (0), ஹர்திக் பாண்ட்யா (4 ரன்), அஸ்வின் (1 ரன்), முகமது ஷமி (0) ஆகியோர் வரிசையாக அவரது சுழலில் சிக்கி அடங்கினர். அப்போது இந்தியா 8 விக்கெட்டுக்கு 195 ரன்களுடன் பரிதவித்தது.

இந்த நெருக்கடியான சூழலில் 9-வது விக்கெட்டுக்கு இறங்கிய இஷாந்த் ஷர்மா, புஜாராவுக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்து ஆறுதல் தந்தார். அவர் தனது பங்குக்கு 14 ரன்கள் (27 பந்து) எடுத்தார். அப்போது புஜாரா 96 ரன்களுடன் இருந்தார். பிறகு கடைசி விக்கெட்டுக்கு வந்த பும்ராவின் துணையுடன் புஜாரா தனது 15-வது சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து மண்ணில் புஜாராவின் முதல் சதம் இதுவாகும்.

கடைசி விக்கெட் ஜோடியினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்து, இங்கிலாந்து பவுலர்களை வெறுப்பேற்றினர். இறுதியில் பும்ரா 6 ரன்னில் (24 பந்து) கேட்ச் ஆனார்.

இந்தியா 273 ரன்

இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 273 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரை விட 27 ரன்கள் அதிகமாகும். புஜாரா 132 ரன்களுடன் (257 பந்து, 16 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 27 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story