கிரிக்கெட்

இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா?கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + Will the Indian team win the comfort? Last Test Start Today

இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா?கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா?கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து பயணத்தை ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்யும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது.
லண்டன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 டெஸ்டுகளில் 3-ல் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.


இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற போதிலும் தொடரை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதில் இரு அணி வீரர்களும் தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்திய அணி பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் 194 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 31 ரன்கள் வித்தியாசத்தில் சரண் அடைந்தது. 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது. நாட்டிங்காமில் நடந்த 3-வது டெஸ்டில் மட்டும் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலியைத்தான் மலை போல் நம்பி இருக்கிறது. 2 சதம், 3 அரைசதம் உள்பட 544 ரன்கள் குவித்து இருக்கும் விராட் கோலி, இன்னும் 59 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சிறப்பை (2002-ம் ஆண்டில் டிராவிட் 602 ரன் எடுத்துள்ளார்) பெறுவார். கோலியை தவிர்த்து, புஜாரா (241 ரன்), துணை கேப்டன் ரஹானே (220 ரன்) ஓரளவு நன்றாக ஆடியிருக்கிறார்கள். மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. இது தான் இந்திய அணியின் பலவீனமாக அமைந்துள்ளது. பவுலர்கள் அசத்தும் நிலையில், பேட்ஸ்மேன்களும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் தொடர் இப்போது இந்திய அணி வசம் ஆகியிருக்கும். பொன்னான வாய்ப்பை நமது வீரர்கள் கோட்டை விட்டு விட்டனர்.

தொடரை பறிகொடுத்து விட்ட நிலையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. இதே போல் ஹர்திக் பாண்ட்யா கழற்றி விடப்பட்டு அவரது இடத்தில் புதுமுக வீரர் ஹனுமா விஹாரி இடம் பெற வாய்ப்புள்ளது. விஹாரியை பேட்ஸ்மேனாக மட்டுமின்றி பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அடுத்து வரும் ஆசிய கிரிக்கெட்டில் ஆட இருப்பதால் அவருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம்.

அதே சமயம் தொடரை கைப்பற்றிய குதூகலத்தில் உள்ள இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்று அதை தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக்குக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. 33 வயதான அலஸ்டயர் குக் இத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால், இந்த டெஸ்ட் இங்கிலாந்து வீரர்களுக்கு உணர்வு பூர்வமாக இருக்கும். பின்வரிசையில் ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் தான் இங்கிலாந்து அணிக்கு ஆணிவேராக விளங்குகிறார். இதுவரை 2 அரைசதம் உள்பட 251 ரன்களும், 8 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அவர் கைகொடுத்திருக்காவிட்டால் இரண்டு டெஸ்டில் இங்கிலாந்து அணி மண்ணை கவ்வியிருக்கக்கூடும்.

இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கும் என்பதால் இங்கிலாந்து அணி எந்தவித மாற்றமும் இன்றி மீண்டும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காண முடிவு செய்துள்ளது.

இந்த தொடரில் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். லண்டன் ஓவலில் இந்திய அணி இதுவரை 12 டெஸ்டுகளில் விளையாடி அதில் ஒன்றில் வெற்றியும் (1971-ம் ஆண்டு), 4-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் 100 டெஸ்டுகளில் பங்கேற்று 41-ல் வெற்றியும், 22-ல் தோல்வியும், 37-ல் டிராவும் சந்தித்துள்ளது. 1938-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 903 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். 2007-ம் ஆண்டில் 664 ரன்கள் சேர்த்ததே இங்கு இந்தியாவின் அதிகபட்சமாகும்.

இந்த டெஸ்டில் இந்திய அணி வாகை சூடினால், 1986-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 2 டெஸ்டுகளில் வெற்றி பெற்ற பெருமை இந்திய அணிக்கு கிடைக்கும். மொத்தத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா? அல்லது மறுபடியும் அடங்கிப்போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா அல்லது ஹனுமா விஹாரி, பும்ரா அல்லது ஷர்துல் தாகூர், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா.

இங்கிலாந்து: அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், மொயீன் அலி, ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் குர்ரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், அடில் ரஷித்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

வெற்றியுடன் குக்கை வழியனுப்புவோம் ஜோ ரூட

‘அலஸ்டயர் குக்குக்கு, இந்த வாரம் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும். நிறைய வீரர்கள் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறார்கள். ஓய்வின் மூலம் வீரர்களின் ஓய்வறையில் அவரை தவறு விடுவதால் அது மிகப்பெரிய இழப்பாகும். 12 ஆண்டுகள் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராக, அதுவும் பெரும்பாலும் கடினமான சீதோஷ்ண நிலையில் விளையாடி இருக்கிறார். இவ்வாறு சாதித்த தொடக்க ஆட்டக்காரர்கள் உலக அரங்கில் மிகவும் குறைவு. அவர் எங்களுக்கு எல்லாம் முன்மாதிரி. அவரை போன்ற ஒரு வீரரை மீண்டும் பார்க்க முடியாது. இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதில் தான் தற்போது எங்களது முழு கவனமும் உள்ளது. உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியாவை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் முடிப்பது தான் அலஸ்டயர் குக்குக்கு சரியான பிரிவுபசார பரிசாக இருக்கும்’ - இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.

‘பொறுமை முக்கியம்’ ரஹானே

‘இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது பேட்டிங் என்றாலும் சரி, பந்து வீச்சு என்றாலும் சரி பொறுமை மிகவும் முக்கியமாகும். பேட்டிங்கை எடுத்துக் கொண்டால், பந்தை அடிக்காமல் வெளியே விடும் யுக்தியை நீண்ட நேரம் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் தாக்குப்பிடிக்க முடியும். எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசிய நிலையில், பேட்ஸ்மேன்கள் ஒரு குழுவாக அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதது தான் வருத்தம் அளிக்கிறது. இது எங்களுக்கு முக்கியமான போட்டி. தற்போது 1-3 என்ற கணக்கில் பின்தங்கி நிற்கிறோம். தொடரை உயர்ந்த நிலையில் நிறைவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 3-2 என்ற கணக்கில் முடித்தால் உண்மையிலேயே அது சிறப்பாக இருக்கும்.’ - இந்திய துணை கேப்டன் ரஹானே.