‘வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது’ கேப்டன் விராட்கோலி பேட்டி


‘வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது’ கேப்டன் விராட்கோலி பேட்டி
x
தினத்தந்தி 12 Sep 2018 10:00 PM GMT (Updated: 12 Sep 2018 7:29 PM GMT)

‘வெளிநாட்டு தொடர்களில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாகவே செயல்படுகிறது’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

லண்டன், 

‘வெளிநாட்டு தொடர்களில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாகவே செயல்படுகிறது’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி கடைசி நாளான நேற்று முன்தினம் 94.3 ஓவர்களில் 345 ரன்களில் ‘ஆல்–அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (149 ரன்கள்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (114 ரன்கள்) இணை 6–வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியினருக்கு பீதியை கிளப்பினாலும், அது வெற்றிக்கு உதவாமல் வீணானது.

சதம் அடித்த லோகேஷ் ராகுல் டெஸ்ட் போட்டியில் இலக்கை நோக்கி ஆடுகையில் 2–வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் கவாஸ்கருக்கு (221 ரன்கள்) அடுத்த இடத்தை பிடித்தார். இதேபோல் ரிஷாப் பான்ட் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும், டெஸ்டில் இலக்கை நோக்கி விளையாடுகையில் 2–வது இன்னிங்சில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பையும் தனதாக்கினார்.

ஆண்டர்சன் சாதனை

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 4–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. மற்ற அனைத்து டெஸ்டிலும் தோல்வி கண்டது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் ஆட்டநாயகன் விருதையும், இங்கிலாந்து வீரர் சாம் குர்ரன், இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆகியோர் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசி விக்கெட்டாக முகமது ‌ஷமியை வீழ்த்தியதன் மூலம் மொத்தம் 143 டெஸ்டில் விளையாடி 564 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4–வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தை (563 விக்கெட்டுகள், 124 டெஸ்டில்) பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை ஜேம்ஸ் ஆண்டர்சன் தனதாக்கினார். அத்துடன் டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் மெக்ராத்திடம் இருந்து கபளீகரம் செய்தார். தனது சாதனையை தகர்த்த ஆண்டர்சனை, மெக்ராத் பாராட்டி இருக்கிறார்.

விராட்கோலி பேட்டி

தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்த போட்டி தொடரின் முடிவு நாங்கள் நினைத்தபடி அமையாவிட்டாலும், எங்களது ஆட்டத்தில் பெரிய அளவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எல்லா ஆட்டங்களிலும் நாங்கள் நல்ல போட்டி அளித்தோம். அனைத்து ஆட்டங்களிலும் நாங்கள் சில கட்டங்களில் வலுவான நிலையில் இருக்க தான் செய்தோம். அப்படியானால் ஏதோ ஒரு வி‌ஷயத்தை நாங்கள் சரியாக செய்து இருக்கிறோம். 4–வது டெஸ்ட் போட்டியுடன் நாங்கள் தொடரை இழந்து விட்டாலும், கடைசி போட்டியிலும் வெற்றிக்காக கடைசி வரை போராடினோம். எளிதில் எதனையும் விட்டுக் கொடுத்து விடவில்லை. எதிரணிக்கு நாங்கள் நல்ல நெருக்கடி கொடுத்தோம். ஆனாலும் நாங்கள் அளித்த நெருக்கடியை போதுமான அளவுக்கு நீண்ட நேரம் தொடர்ச்சியாக அளிக்க முடியாமல் போய் விட்டது. இங்கிலாந்து அணியினர் தங்களுக்கு கிடைத்த சாதகமான சூழ்நிலைகளில் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர்.

கடந்த 15 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்லி இருப்பது சரியானது தான் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?. நாங்கள் நன்றாக செயல்படவில்லை என்று நீங்கள் கூறுவது உங்களுடைய கருத்தாகும்.

நல்ல தொடக்கம் காண வேண்டும்

டெஸ்ட் போட்டி தொடரை வெல்வது தான் எங்கள் நோக்கமாகும். இந்த போட்டி தொடரின் முடிவு எங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கவில்லை. எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சரியான அணுகுமுறையில் தான் ஆடினோம். கடைசி டெஸ்ட் போட்டியில் தேனீர் இடைவேளையின் போது நமது அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே நாங்கள் நினைத்தோம். அந்த அளவுக்கு லோகேஷ் ராகுல், ரிஷாப் பான்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நமது அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி எதிரணி விக்கெட்டை வீழ்த்தியது ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

அடுத்த போட்டி தொடரில் விளையாடுகையில் நாம் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாட வேண்டும். நல்ல தொடக்கம் காணாமல் சரிவில் இருந்து மீண்டு வந்து விடலாம் என்று நினைக்கக்கூடாது. கடினமான சூழ்நிலையில் சரிவில் இருந்து மீண்டு வருவது என்பது மிகவும் கடினமானதாகும். சில சமயங்களில் நாங்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் தவறி விட்டோம். அது குறித்து வீரர்களுடன் விவாதிப்போம்.

இவ்வாறு விராட்கோலி கூறினார்.

ஜோரூட் மகிழ்ச்சி

வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவிக்கையில், ‘கடினமான போட்டி தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணி சில அபூர்வமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எங்கள் அணியினரும் சிறப்பான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். லோகேஷ் ராகுல்–ரிஷாப் பான்ட் ஜோடியின் அபாரமான ஆட்டத்தை பார்க்கையில் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்று தோன்றியது. எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து போட்டியை எங்களுக்கு சாதகமாக்கினார்கள். இங்கிலாந்து அணிக்கு நீண்ட காலம் நல்ல பங்களிப்பை அளித்த குக்கை சரியான முறையில் வழியனுப்பி இருக்கிறோம். ஆண்டர்சனின் சாதனை நம்பமுடியாத வகையில் இருக்கிறது. அவர் இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவார். நாங்கள் அணியாக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறோம்’ என்றார்.


Next Story