‘வங்காளதேச அணியை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்’– தவான்


‘வங்காளதேச அணியை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்’– தவான்
x
தினத்தந்தி 27 Sep 2018 9:30 PM GMT (Updated: 27 Sep 2018 8:54 PM GMT)

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நேற்று நிருபர்களிடம் கூற

துபாய், 

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் எல்லா அணிகளும் கடும் சவால் அளித்தன. இறுதிப்போட்டியில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் என்றே ஒவ்வொருவரும் நினைத்தனர். ஆனால் வங்காளதேசம் சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்து விட்டது. வங்காளதேசத்தை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். ஏனெனில் பெரிய அணி என்று கருதப்பட்ட பாகிஸ்தானையே அவர்கள் மிஞ்சி விட்டனர்.

வங்காளதேச அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன் பலனாக இப்போது இறுதிப்போட்டியையும் எட்டி இருக்கிறது. அந்த அணியில் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தங்கள் பணி என்ன? நெருக்கடிக்கு மத்தியில் எப்படி விளையாட வேண்டும்? என்பது நன்கு தெரியும். அவர்கள் பெரிய அணிக்கு எதிராக அச்சமின்றி விளையாடக்கூடியவர்கள்.

வங்காளதேச அணி இறுதிப்போட்டிகளில் எதுவும் வெற்றி பெற்றதில்லையே என்று கேட்கிறீர்கள். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்து 18 ஆண்டுகள் தான் ஆகிறது. அதனால் கோப்பையை வெல்வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும். எது எப்படியோ நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று உறுதியாக நம்புகிறேன். வங்காளதேச அணியின் கனவு வேறு சில போட்டிகளில் நிறைவேறுவதை விரைவில் பார்க்கலாம்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான் சிறப்பாக ஆடவில்லை. மற்றவர்கள் என்னை விட நன்றாக ஆடியதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் எல்லா வகையிலும் முழு முயற்சியை வெளிப்படுத்தினேன். அதனால் இதில் அவமானப்படுவதற்கு எதுவும் இல்லை. அதன் பிறகு இப்போது இங்கு (துபாய்) ஒரு நாள் கிரிக்கெட்டில் வித்தியாசமான சீதோஷ்ண நிலையில் விளையாடி கணிசமான ரன்கள் குவித்துள்ளேன். சில சமயம் நமது திட்டம் கைகொடுக்கும். சில நேரம் நினைத்தது மாதிரி நடக்காது.

இவ்வாறு தவான் கூறினார்.


Next Story