அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை


அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி:  ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை
x
தினத்தந்தி 19 Oct 2018 10:00 PM GMT (Updated: 19 Oct 2018 7:07 PM GMT)

அபுதாபியில் நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்டின் 3-வது நாளில் வேடிக்கையான ஒரு ரன்-அவுட் சம்பவம் நிகழ்ந்தது.

அபுதாபி, 

அபுதாபியில் நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்டின் 3-வது நாளில் வேடிக்கையான ஒரு ரன்-அவுட் சம்பவம் நிகழ்ந்தது. 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி (64 ரன்) பீட்டர் சிடிலின் பந்து வீச்சில் பந்தை ஸ்லிப் பகுதியில் அடித்து விட அது தேர்டுமேன் திசையில் பவுண்டரி நோக்கி வேகமாக ஓடியது. ரன் எடுக்க சிறிது தூரம் ஓடிய அசார் அலி, பிறகு பந்து பவுண்டரியை தொட்டு விட்டதாக நினைத்து எதிர்முனை பேட்ஸ்மேன் ஆசாத் ஷபிக்குடன் ஆடுகளத்தின் நடுப்பகுதியில் நின்று சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டம், பந்து எல்லைக்கோட்டுக்கு மிக அருகில் சென்று நின்று விட்டது. பந்தை எடுத்த மிட்செல் ஸ்டார்க் அதை விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நோக்கி எறிந்தார். துரிதமாக செயல்பட்ட டிம் பெய்ன் பந்தை பிடித்து, அசார் அலியை ரன்-அவுட் செய்தார். சில வினாடிகளுக்கு பிறகு நடந்ததை அறிந்து கொண்ட அசார் அலி, நொந்தபடி வெளியேறினார்.

இந்த வித்தியாசமான ‘ரன்-அவுட் காமெடி’ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து அசார் அலி கூறுகையில், ‘மிட்செல் ஸ்டார்க் பந்தை வீசிய போது, பவுண்டரியை கடந்து சென்ற பந்தை தான் தூக்கி போடுகிறார் என்று நினைத்தேன். விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த போது, ஜாலிக்காக அப்படி செய்கிறார் என்று கருதினேன். என்ன நடந்தது என்று அந்த நேரத்தில் எனக்கு தெரியாது. இது முழுக்க முழுக்க எனது தவறு தான். வீரர்களின் ஓய்வறையில் ஒவ்வொருவரும் இது பற்றி பேசி சிரித்தனர். நான் வீட்டிற்கு சென்றால் எனது மகன்கள் நிச்சயம் என்னை கேலி செய்யப் போகிறார்கள். நீண்ட காலம் இது பற்றி பேசுவார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுரை கூறினால், இந்த ரன்-அவுட்டை தான் வம்புக்கு இழுப்பார்கள்’ என்றார்.

Next Story