ரோகித் சர்மா - அம்பதி ராயுடு சதத்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு இந்தியா 378 ரன்கள் வெற்றி இலக்கு


ரோகித் சர்மா - அம்பதி ராயுடு   சதத்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு இந்தியா 378 ரன்கள் வெற்றி இலக்கு
x
தினத்தந்தி 29 Oct 2018 12:20 PM GMT (Updated: 29 Oct 2018 12:20 PM GMT)

ரோகித் சர்மா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோரின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா


மும்பை

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.

ரோகித் சர்மா - தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 71 ரன்னாக இருக்கும்போது தவான் ஆட்டமிழந்தார். தவான் 40 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். இந்தியாவின் ஸ்கோர் 16.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ரோச் பந்தில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். 22-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரோகித் சர்மா 60 பந்தில் 37-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

அரைசதம் அடித்தபின்னர் ரோகித் சர்மா தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். மறுமுனையில் அம்பதி ராயுடும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 98 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் தனது 21-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இந்த ஜோடி 312 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ரோகித் சர்மா 137 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 
ரோகித் சர்மா - அம்பதி ராயுடு ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது.

அடுத்து அம்பதி ராயுடு உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். அம்பதி ராயுடு 80 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடி அவர் சதம் அடித்த அடுத்த பந்தில் ரன்அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 47.1 ஓவரில் 344 ரன்கள் எடுத்திருந்தது.

டோனி 15 பந்தில் 2 பவுண்டரியுடன் 23 ரன்கள் சேர்த்து ஆட்மிழந்தார். 6-விக்கெட்டுக்கு கேதர் ஜாதவ் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். கேதர் ஜாதவ் 7 பந்தில் 16 ரன்களும், ஜடேஜா 4 பந்தில் 7 ரன்களும் அடிக்க இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்க உள்ளது.

Next Story