ராகுல் டிராவிட்டுக்கு ஐ.சி.சி. கவுரவம்


ராகுல் டிராவிட்டுக்கு ஐ.சி.சி. கவுரவம்
x
தினத்தந்தி 1 Nov 2018 11:19 PM GMT (Updated: 1 Nov 2018 11:19 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘ஹால் ஆப் பேம்’ என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது.

திருவனந்தபுரம்,

ஐ.சி.சி.யின் கவுரவமிக்க இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் (இந்தியா), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), கிலாரி டெய்லர் (இங்கிலாந்து பெண்கள் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்) ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று கடந்த ஜூலை மாதத்தில் ஐ.சி.சி. அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி தொடங்கும் முன்பு இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான அடையாளமாக ஐ.சி.சி.யின் நினைவுப்பரிசு டிராவிட்டுக்கு வழங்கப்பட்டது. இதனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வழங்கினார். ‘ஹால் ஆப் பேம்’ கவுரவத்தை பெறும் 5-வது இந்திய வீரர் டிராவிட் ஆவார்.

ஏற்கனவே இந்த கவுரவத்தை பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ் (மூவரும் 2009), கும்பிளே (2015) ஆகியோர் பெற்றுள்ளனர். வீரர்கள் சர்வதேச போட்டியில் ஓய்வு பெற்ற 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். இந்திய ஜாம்பவான் தெண்டுல்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று இன்னும் 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story