ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி தொடரை சமன் செய்தது


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி தொடரை சமன் செய்தது
x
தினத்தந்தி 25 Nov 2018 10:00 PM GMT (Updated: 25 Nov 2018 9:03 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் குருணல் பாண்ட்யா, விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்து தொடரை சமன் செய்தது.

சிட்னி, 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் குருணல் பாண்ட்யா, விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்து தொடரை சமன் செய்தது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பெரேன்டோர்ப்புக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டார்.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ரன்களை திரட்டினர். 8–வது ஓவர் வரை ஆஸ்திரேலிய தொடக்க ஜோடியை பிரிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்து வீச வந்ததும் அவர்கள் தடுமாறத் தொடங்கினர். அவரது பந்து வீச்சில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 28 ரன்களில் (23 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் ஆனார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா ஒரே ஓவரில் டார்சி ஷார்ட் (33 ரன்), மெக்டெர்மோட் (0) ஆகியோருக்கு ‘செக்’ வைத்தார். இதன் பிறகு ஆஸ்திரேலியாவின் ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்தது. ‘அதிரடி புயல்’ மேக்ஸ்வெல்லும் (13 ரன்), குருணல் பாண்ட்யாவின் சுழலில் சிக்கினார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் ஒரு சிக்சர் கூட அடிக்க இயலவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் சிக்சர் ஏதும் அடிக்காமல் ஆஸ்திரேலியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்திய தரப்பில் குருணல் பாண்ட்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தவான் மிரட்டல்

அடுத்து களம் இறங்கிய இந்தியாவுக்கு ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் ‘விறுவிறு’ தொடக்கம் தந்து மிரட்டினர். நாதன் கவுல்டர்–நிலேவின் ஓவரில் தலா ஒரு சிக்சரை பறக்க விட்ட இவர்கள், ஸ்டோனிசின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி சாத்தினர். குழுமியிருந்த 37 ஆயிரத்து 339 ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் தான். அவர்களுக்கு இருவரும் விருந்து படைத்தனர். ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்த இவர்கள் 67 ரன்கள் (5.3 ஓவர்) சேகரித்த நிலையில் பிரிந்தனர். ஷிகர் தவான் 41 ரன்களில் (22 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அவருக்கு முதலில் நடுவர் அவுட் வழங்கவில்லை. பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றனர். தொடர்ந்து ரோகித் சர்மா 23 ரன்னில் (16 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

அடுத்து கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று விளையாட மறுபுறம் லோகேஷ் ராகுல் (14 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (0) அடுத்தடுத்து வெளியேறியதால், இந்தியாவுக்கு அழுத்தம் உருவானது. இதைத் தொடர்ந்து கோலியுடன், தினேஷ் கார்த்திக் கைகோர்த்து அணி சரிவில் இருந்து மீள்வதற்கு ஒத்துழைத்தார். இதனால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆண்ட்ரூ டை, மேக்ஸ்வெல்லின் ஓவர்களில் கோலி சிக்சர்களை ஓடவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். திடீரென வேகத்தை குறைத்து பந்து போடும் ஆஸ்திரேலிய வீரர்களின் யுக்தி, இந்த முறை கோலியிடம் எடுபடவில்லை. தினேஷ் கார்த்திக்கும், சில வலுவான ஷாட்டுகளை அடித்து அட்டகாசப்படுத்தினார்.

இந்தியா வெற்றி

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. இதில் கோலி தொடர்ந்து இரண்டு பவுண்டரி விளாசி இலக்கை எட்ட வைத்தார். முடிவில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 61 ரன்களுடனும் (41 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 22 ரன்களுடனும் (18 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். குருணல் பாண்ட்யா ஆட்டநாயகனாகவும், ஷிகர் தவான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 1–1 என்ற கணக்கில் சமன் செய்தது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடந்த 2–வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

அடுத்து இந்தியா–ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6–ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

குருணல் பாண்ட்யா, கோலி புதிய சாதனை

*இந்திய சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சு இது தான். இதற்கு முன்பு எந்த சுழற்பந்து வீச்சாளரும் 3 விக்கெட்டுக்கு மேல் எடுத்ததில்லை.

*இந்திய கேப்டன் விராட் கோலி, 20 ஓவர் கிரிக்கெட்டில் 2–வது பேட்டிங்கின் போது இதுவரை 14 முறை ஆட்டம் இழக்காமல் (நாட்–அவுட்) இருந்துள்ளார். அத்தனை தடவையும் இந்தியா வசமே வெற்றி கனிந்திருக்கிறது.

*61 ரன்கள் விளாசிய விராட் கோலிக்கு, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இது 19–வது அரைசதமாகும். இதன் மூலம் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார்.

*20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை 5 அரைசதங்கள் உள்பட 488 ரன்கள் சேர்த்துள்ளார். 20 ஓவர் போட்டியில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இது தான்.


Next Story