கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: ‘‘சவாலை சந்திக்க எங்களது பந்து வீச்சாளர்கள் தயார்’’ + "||" + "We meet the challenge Bowlers ready '

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: ‘‘சவாலை சந்திக்க எங்களது பந்து வீச்சாளர்கள் தயார்’’

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: ‘‘சவாலை சந்திக்க எங்களது பந்து வீச்சாளர்கள் தயார்’’
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.

அடிலெய்டு,

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. தங்களது பந்து வீச்சாளர்கள் எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ரோகித் அல்லது விஹாரி

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை கேப்டன் விராட் கோலி நேற்று வெளியிட்டார். 5 பந்து வீச்சாளர் பாணியை கைவிட்டுள்ள கோலி, இந்த டெஸ்டில் 4 பந்து வீச்சாளர்களுடன் களம் காண திட்டமிட்டு இருக்கிறார். புவனேஷ்வர்குமார், ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

பேட்டிங்கில் 6–வது வரிசைக்கு ரோகித் சர்மா மற்றும் ஹனுமா விஹாரி இடையே போட்டி நிலவுகிறது. தனது அறிமுக டெஸ்டில் அரைசதம் அடித்த விஹாரி, சுழற்பந்து வீச்சும் வீசக்கூடியவர். அதனால் ரோகித்தை காட்டிலும் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் அனுபவம் வாய்ந்தவர் தேவை என்று அணி நிர்வாகம் விரும்பினால், ரோகித் சர்மா இடம் பெறுவார்.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை காலம் முடிவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ளது. அவர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியை புரட்டியெடுக்க நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு இது; அதை தவற விட்டு விடக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் ஆவலை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 44 டெஸ்டுகளில் விளையாடி வெறும் 5–ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. 71 ஆண்டுகளாக இந்திய அணி அங்கு விளையாடி வருகிறது. ஆனால் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வசப்படுத்தியதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விடைகொடுக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் நடந்த தொடர்களை கோட்டை விட்ட இந்திய அணி, அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

கோலி பேட்டி

முதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

உள்நாட்டில் எந்தவிதமான ஆஸ்திரேலிய அணியும் பலவீனமானது கிடையாது. இன்னும் உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவுக்கு திறமை அவர்களிடம் இருக்கிறது. அதனால் அவர்களை குறைத்து மதிப்பிடமாட்டோம்.

கடந்த முறை (2014–15) ஆஸ்திரேலியாவில் விளையாடிய இந்திய அணிக்கும், தற்போதைய அணிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. வீரர்கள் அதிகமான போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்று இருக்கிறார்கள். பவுலர்கள் உடல்தகுதியிலும் முன்பை விட வலுப்பெற்றுள்ளனர்.

பவுலர்கள் அசத்துவார்கள்

ஆஸ்திரேலிய மண்ணில் நீண்ட நேரம் சரியான பகுதியில் பந்தை ‘பிட்ச்’ செய்து வீசுவது முக்கியமானதாகும். ஏனெனில் இங்குள்ள சீதோஷ்ண நிலை கடினமானது. அதாவது வெப்பம் அதிகமாக இருக்கும். ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்படும். கூக்கபுரா பந்துகள் 20 ஓவர்களுக்கு பிறகு பெரிய அளவில் ‘ஸ்விங்’ ஆகாது. அனேகமாக 45 முதல் 55 ஓவர்களுக்கு பிறகு தான் பந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகும். இடைப்பட்ட மிடில்பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எங்களது பந்து வீச்சாளர்கள் தற்சமயம் திறமை அடிப்படையில், உச்சத்தில் இருப்பதாக உணர்கிறார்கள். இது போன்ற சவாலை சந்திக்க தயாராக உள்ளனர். அவர்களை பொறுத்தவரை எத்தகைய சீதோஷ்ண நிலை என்றாலும் சரி, அது கடினமாக இருந்தாலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி சாதிக்கும் மனநிலையுடன் காத்திருக்கிறார்கள். இதே போல் பேட்ஸ்மேன்கள் தங்களது முழுமையை வெளிக்காட்டினால், இது பேட்டிங் செய்வதற்கு சிறந்த இடமாக இருக்கும். நமது பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடுவது அவசியமாகும்.

ஆல்–ரவுண்டர் இல்லாத குறை

எந்த அணியும் தங்களிடம் வேகப்பந்து வீச்சு ஆல்–ரவுண்டர் இருக்க வேண்டும் என்று விரும்பும். நமது அணியில் அத்தகைய ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயத்தால் இடம் பெறவில்லை. இது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில் அவர் இருந்திருந்தால் சரியான கலவையில் அணியை தேர்வு செய்வதற்கு சவுகரியமாக இருக்கும். ஆல்–ரவுண்டர் இல்லாததால் கூடுதல் சுமை வந்து விட்டதாக நினைக்காமல் பவுலர்கள் செயல்பட வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது மட்டுமே எங்களது ஒரே குறிக்கோள்.

அடிலெய்டு நகரில் இந்த ஸ்டேடியத்துக்கு வந்து விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். இங்கு வந்தாலே உற்சாகம் அடைந்து விடுகிறேன். அதற்காக, இங்கு நிச்சயம் ரன்கள் குவிக்க முடியும் என்று சொல்லவில்லை. ஆனால் உலகில் நான் சென்ற இடங்களிலேயே அடிலெய்டு வித்தியாசமானதாக இருப்பதை உணர்கிறேன். அடிலெய்டு எனக்கு எப்போதும் தனித்துவம் வாய்ந்தது. எனது முதலாவது டெஸ்ட் சதத்தை இங்கு தான் அடித்தேன்.

இவ்வாறு கோலி கூறினார்.

ஆஸ்திரேலியா எப்படி?

எழுச்சி பெறும் முனைப்புடன் உள்ள ஆஸ்திரேலிய அணி ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளது. ஆரோன் பிஞ்சுடன் தொடக்க ஆட்டக்காரராக புதுமுக வீரராக மார்கஸ் ஹாரிஸ் இறங்குகிறார். ஆச்சரியப்படும் வகையில் துணை கேப்டன் மிட்செல் மார்ஷ் கழற்றி விடப்பட்டார். இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘மிட்செல் மார்ஷ் திறமையானவர் என்பது தெரியும். ஆனால் நாங்கள் விரும்பிய மாதிரி அவரது ஆட்டம் சீராக இல்லை. இதனால் உள்ளூர் போட்டியில் விளையாட அனுப்பப்படுவார். ஆனால் இந்த தொடரின் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர் அணிக்கு தேவையாக இருப்பார். மற்ற பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் தாக்குதலை தொடுக்க தயாராக உள்ளனர்.’ என்றார்.

இங்கு வாட்டி எடுக்கும் வெயிலால் ஆடுகளம் உலர்வாக இருப்பதால், சுழற்பந்து வீச்சும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதிகாலை 5.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:–

இந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா அல்லது ஹனுமா விஹாரி, ரிஷாப் பான்ட், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ‌ஷர்மா, முகமது ‌ஷமி.

ஆஸ்திரேலியா: மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

பிரித்வி ஷா களம் இறங்குவது எப்போது?

பயிற்சி கிரிக்கெட்டில் பீல்டிங்கின் போது இடது கணுக்காலில் காயமடைந்த இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா முதலாவது டெஸ்டில் விளையாடவில்லை. அவரது காயத்தன்மை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘பிரித்வி ஷா காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். இப்போது நடக்கிறார். இந்த வார இறுதிக்குள் ஓட ஆரம்பித்து விட்டால், அது நல்ல அறிகுறியாக இருக்கும். 2–வது டெஸ்டுக்கு முன்பாக அவரது காயம் எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது என்பதை பார்த்து அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம்’ என்றார். 19 வயதான பிரித்வி ஷா மெல்போர்னில் 26–ந்தேதி தொடங்கும் 3–வது டெஸ்டில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது.