ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’


ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’
x
தினத்தந்தி 7 Dec 2018 9:15 PM GMT (Updated: 7 Dec 2018 8:49 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு–கேரளா (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து இருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 98 ஓவர்களில் 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஷாருக்கான் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கேரளா அணி தரப்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டும், பாசில் தம்பி 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கேரளா அணி, தமிழக வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 75 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. தமிழக அணி தரப்பில் நடராஜன், ரஹில் ஷா தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்று 3–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

டெல்லியில் நடந்து வரும் டெல்லி–ஆந்திரா (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 121 ஓவர்களில் 390 ரன்னில் ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ரிக்கி புய் 187 ரன்கள் குவித்தார். டெல்லி அணி தரப்பில் சுபோத் பாதி 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 56 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியுடன் ஓய்வு பெறும் கவுதம் கம்பீர் 154 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 92 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.


Next Story