பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்


பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்
x
தினத்தந்தி 16 Dec 2018 11:30 PM GMT (Updated: 16 Dec 2018 10:17 PM GMT)

பெர்த்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் கோலி சதம் அடித்தார்.

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (82 ரன்), துணை கேப்டன் ரஹானே (51 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசினார். அந்த ஓவரிலேயே ரஹானே (51 ரன்) பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது, விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். அடுத்து ஹனுமா விஹாரி இறங்கினார்.

மறுமுனையில் எதிரணி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய விராட் கோலி, பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 25-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஹனுமா விஹாரி தனது பங்குக்கு 20 ரன்கள் (46 பந்து, 2 பவுண்டரி) எடுத்தார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வப்போது பவுன்சர்களை போட்டு மிரட்டிப்பார்த்தனர். ஸ்டார்க் வீசிய ஒரு பந்து கோலியின் முழங்கையை பதம் பார்த்தது. அணியின் ஸ்கோர் 251 ரன்களாக உயர்ந்த போது, விராட் கோலி (123 ரன், 257 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) சர்ச்சைக்குரிய முறையில் ‘ஸ்லிப்’ பகுதியில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (36 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மட்டும் குறிப்பிடும்படி ஆடினார். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் கடைசி 32 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது.

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்திய ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை அள்ளினார். இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 7-வது நிகழ்வாகும். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் சாதனையை (இவரும் 7 முறை) சமன் செய்தார்.

பின்னர் 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா (41 ரன், 102 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் டிம் பெய்ன் (8 ரன்) ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்கள்.

இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 175 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய மைதானத்தில் 200 ரன்களுக்கு மேலான ஸ்கோரை விரட்டிப்பிடிப்பது (சேசிங்) எளிதான காரியம் அல்ல. ஆடுகளத்தில் இப்போதே நிறைய வெடிப்புகள் வந்து விட்டன. அதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கையே சற்று ஓங்கி இருப்பது போல் தெரிகிறது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

கோலிக்கு சர்ச்சைக்குரிய அவுட்

விராட் கோலி அடித்த பந்தை தரையோடு கேட்ச் செய்யும் ஹேன்ட்ஸ்கோம்ப்.
இந்திய கேப்டன் விராட் கோலி சதத்தை கடந்த பிறகு ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ‘தேர்டுமேன்’ பகுதியில் பிரமாதமான ஒரு சிக்சரை பறக்க விட்டார். அவர் நிலைத்து நின்று ஆடிய விதத்தை பார்த்த போது, இந்திய அணி 300 ரன்களை கடந்து விடும் என்றே நினைக்கத்தோன்றியது. கோலி 123 ரன்களில், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்தை அடித்த போது, அது பேட்டில் உரசிக்கொண்டு 2-வது ஸ்லிப்பில் நின்ற பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் நோக்கி தாழ்வாக சென்றது. அதை பிடித்த ஹேன்ட்ஸ்கோம்ப், அவுட் என்பது போல் விரலை உயர்த்தியபடி ஓடிவந்தார். சந்தேகம் கிளப்பிய கோலி நகரவில்லை.

இதையடுத்து நடுவர் தர்மசேனா 3-வது நடுவர் நைஜல் லாங்கின் (இங்கிலாந்து) கவனத்துக்கு கொண்டு சென்றார். இவ்வாறு 3-வது நடுவருக்கு செல்லும் போது கள நடுவர் தனது முடிவை முதலில் அவரிடம் சொல்ல வேண்டும். அதற்கு ‘சாப்ட் சிக்னல்’ என்று பெயர். இதன்படி தர்மசேனா அவுட் என்று ‘சாப்ட் சிக்னல்’ கொடுத்தார். பின்னர் டி.வி. ரீப்ளேயில் பல்வேறு கோணங்களில் நைஜல் லாங் ஆராய்ந்தார். ஒரு கோணத்தில் ஹேன்ட்ஸ்கோம்ப் பந்தை தரையோடு அள்ளுவது போல் தெளிவாக தெரிந்தது.

ஆனாலும் உறுதியான ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் குழம்பிய 3-வது நடுவர் நைஜல் லாங், பின்னர் கள நடுவரின் முடிவுக்கு விட்டு விட்டார். இதன்படி கோலிக்கு அவுட் வழங்கப்பட்டது. இதனால் மிகுந்த அதிருப்தியுடன் கோலி பெவிலியன் திரும்பினார். சர்ச்சைக்குரிய தீர்ப்பை, ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

காயத்தால் வெளியேறிய பிஞ்ச்

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 25 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசிய ஒரு பந்து, அவரது வலது கையை பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவர் மேற்கொண்டு பேட் செய்யாமல் பாதியில் (ரிட்டயர்ட்ஹர்ட்) வெளியேறினார். ஆள்காட்டி விரலில் வலியால் அவதிப்பட்ட அவருக்கு ‘எக்ஸ்ரே’ சோதனை எடுத்து பார்க்கப்பட்டது. அதில் எலும்பு முறிவு போன்ற பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் இன்றைய 4-வது நாளில் அவர் கடைசி கட்டத்தில் பேட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story