கிரிக்கெட்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம் + "||" + Indian women's cricket team coach WV Raman appointed

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நேர்காணல்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவி காலம் கடந்த மாதம் இறுதியுடன் முடிவடைந்தது. அவரை பயிற்சியாளராக தொடர செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் சிங், மந்தனா ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். ரமேஷ் பவாரை பயிற்சியாளராக நீட்டிக்க கூடாது என்று சீனியர் வீராங்கனை மிதாலிராஜ் வற்புறுத்தினார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியில் இருந்து மிதாலிராஜ் நீக்கம் செய்யப்பட்டதால் எழுந்த சர்ச்சை காரணமாக ரமேஷ் பவாரின் பதவியை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது. அத்துடன் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

பயிற்சியாளர் பதவிக்கு மொத்தம் 28 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் இருந்து 10 பேருக்கு நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவகத்தில் நேற்று நடந்தது.

3 பேர் பெயர் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியால் நியமிக்கப்பட்ட இடைக்கால தேர்வு கமிட்டியினரான முன்னாள் கேப்டன் கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இறுதி பட்டியலில் இடம் பெற்று இருந்த 10 பேரிடமும் நேர்காணல் நடத்தினார்கள். இதில் டபிள்யூ.வி.ராமன், மனோஜ் பிரபாகர், ரமேஷ் பவார் ஆகிய 3 பேர் நேரில் ஆஜராகி பயிற்சி குறித்த தங்களது திட்டத்தை தேர்வு குழுவினரிடம் விவரித்தனர்.

கிர்ஸ்டன் ‘ஸ்கைப்’ மூலம் இந்திய பெண்கள் அணியின் முன்னேற்றத்துக்கு தான் வைத்து இருக்கும் திட்டங்களை எடுத்துரைத்தார். மற்றவர்களிடம் டெலிபோன் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணல் முடிவில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக 3 ஆண்டுகள் இருந்த (2008 முதல் 2011) தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கேரி கிர்ஸ்டன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் (கர்நாடகா) ஆகிய 3 பேரின் பெயர்களை இறுதி செய்தனர்.

இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை கல்பனா வெங்கட்சார், ரமேஷ் பவார், மனோஜ் பிரபாகர் உள்பட 7 பேரும் நிராகரிக்கப்பட்டார்கள். இறுதி செய்யப்பட்ட 3 பேர்களின் பெயர் பட்டியலை தேர்வு கமிட்டியினர், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பரிந்துரைத்தனர்.

பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம்

கேரி கிர்ஸ்டன் தற்போது ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அந்த பதவியை துறக்க கேரி கிர்ஸ்டன் தயக்கம் காட்டினார். இதனை அடுத்து டபிள்யூ.வி.ராமன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவிதார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பயிற்சியாளர் பதவிக்கு கிர்ஸ்டன் பெயரை தான் முதல் தேர்வாக இடைக்கால தேர்வு கமிட்டி குறிப்பிட்டு இருந்தது. ஆனால் அவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பாததால் அடுத்த தேர்வாக இருந்த டபிள்யூ.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த 53 வயதான டபிள்யூ.வி.ராமன் இந்திய அணிக்காக 11 டெஸ்ட், 27 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். தென்ஆப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த (1992–93) முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய டபிள்யூ.வி.ராமன், ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு மற்றும் பெங்கால் அணியின் பயிற்சியாளராகவும், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்து உள்ளார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பேட்டிங் ஆலோசகராக உள்ளார்.

நியூசிலாந்து தொடரில் இருந்து...

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு பொருளாளர் அனிருத் சவுத்ரி, நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோர் புதிய பயிற்சியாளர் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பான வழக்கு வருகிற 17–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் இந்த நியமனம் தேவையற்றது என்று இருவரும் வற்புறுத்தினார்கள். ஆனால் வினோத் ராய் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜனவரி 24–ந் தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடரில் இருந்து டபிள்யூ.வி.ராமன் தனது பயிற்சியாளர் பதவியை தொடங்குவார். நியூசிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் அணி தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் டெல்லியில் நடைபெறும் என்று தெரிகிறது.