கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ‘ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பேன்’ ஸ்டீவன் சுமித் நம்பிக்கை + "||" + World Cup cricket tournament 'I will be in the Australian team' Steven Smith believes

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ‘ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பேன்’ ஸ்டீவன் சுமித் நம்பிக்கை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ‘ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பேன்’ ஸ்டீவன் சுமித் நம்பிக்கை
‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பேன்’ என்று ஸ்டீவன் சுமித் நம்பிக்கை தெரிவித்தார்.

சிட்னி, 

‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பேன்’ என்று ஸ்டீவன் சுமித் நம்பிக்கை தெரிவித்தார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரம்

கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை ‘ஸ்விங்’ செய்வதற்காக ஆஸ்திரேலிய இளம் வீரர் பான்கிராப்ட் சொரசொரப்பு காகிதத்தை பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தபடி பந்தை சேதப்படுத்தியது வீடியோ மூலம் அம்பலமானது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டும், பான்கிராப்டுக்கு 9 மாதமும் தடை விதித்தது. ஸ்டீவன் சுமித்தின் தடை காலம் வருகிற மார்ச் மாதம் முடிவுக்கு வர இருக்கிறது.

பந்தை சேதப்படுத்திய சம்பவத்துக்காக உடனடியாக ஆஸ்திரேலிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஸ்டீவன் சுமித், அதன் பிறகு முதல்முறையாக சிட்னியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து வீரர்கள் அறையில் பேசிக்கொண்டதை நான் அறிவேன். ஆனால் அந்த வி‌ஷயத்தை தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்தது தான் எனது தவறாகும். ஒரு கேப்டனாக நான் அப்போதே அதனை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். நான் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறியதை எனது தலைமையின் தோல்வி என்று ஒப்புக்கொள்கிறேன். அந்த தவறில் இருந்து கடந்த 9 மாதங்களில் நான் நிறைய பாடங்கள் கற்று இருக்கிறேன்.

கடினமான நாட்கள்

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய மக்கள் அன்பாகவே நடந்து கொண்டார்கள். எளிதில் மன்னித்து விடுவார்கள் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை பெற நான் இன்னும் கடுமையாக உழைத்து வருகிறேன். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பிறகு வீட்டு படுக்கையில் இருந்து எழுந்து வருவதே கடுமையானதாக இருந்தது. அந்த கருப்பு நாட்கள் என் வாழ்வின் கடினமான நாட்கள் எனலாம். நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்தேன். அந்த இக்கட்டான நேரத்தில் எனது மிகவும் நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அந்த மனவேதனையில் இருந்து மீண்டு வர உதவிகரமாக இருந்தனர். நான் செய்த தவறில் இருந்து மீண்டு சிறந்த மனிதனாக மாற முயற்சித்து வருகிறேன்.

வங்காளதேச பிரிமீயர் லீக் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அடுத்து பாகிஸ்தான் லீக் மற்றும் ஐ.பி.எல். போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளேன். ஐ.பி.எல். உலகின் சிறந்த போட்டிகளில் ஒன்றாகும்.

பெருமைக்குரிய வெற்றி

ஆஸ்திரேலிய அணி கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடியதை பார்க்க மிகவும் கடினமாக இருந்தது. அணிக்கு நம்மால் உதவி செய்ய முடியவில்லையே என்று நினைத்து வருந்தினேன். பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் அருமையாக செயல்பட்டு வெற்றி பெற்றது பெருமைக்குரியதாகும். டிம் பெய்ன் அணியை சிறப்பாக வழி நடத்தினார். இக்கட்டான தருணங்களில் அவர் நேர்த்தியாக செயல்பட்டார்.

தற்போது நான் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறேன். ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட முடியும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி மற்றும் ஆ‌ஷஸ் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். அந்த போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதேநேரத்தில் எதையும் உறுதியாக கூற முடியாது. வாய்ப்பு கிடைத்தால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.