தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவிப்பு


தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2018 10:00 PM GMT (Updated: 23 Dec 2018 8:33 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவித்துள்ளது.

தர்மசாலா, 

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவித்துள்ளது.

இமாச்சலபிரதேசம் முன்னிலை

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு – இமாச்சலபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) தர்மசாலாவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தமிழக அணி 227 ரன்களில் ஆல்–அவுட் ஆனதை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய இமாச்சலபிரதேச அணி தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 25 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்று இமாச்சலபிரதேச அணி தொடர்ந்து ஆடியது. குர்விந்தர்சிங் (8 ரன்), விக்கெட் கீப்பர் அங்குஸ் பெய்ன்ஸ் (8 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர். அப்போது அந்த அணி 3 விக்கெட்டுக்கு 57 ரன்களுடன் தடுமாறியது. இதன் பிறகு வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடியதால் இமாச்சலபிரதேச அணி சரிவில் இருந்து நிமிர்ந்தது. ராகவ் தவான் 71 ரன்களிலும், நிகில் கங்தா 43 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 2–வது நாள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்து 113 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அங்கித் கல்சி 99 ரன்களுடனும், ரிஷி தவான் 71 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழகம் தரப்பில் டி.நடராஜன், முகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஜாபர் சதம்

நடப்பு சாம்பியன் விதர்பா – குஜராத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நாக்பூரில் (ஏ பிரிவு) நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 321 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 2–வது நாள் முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்துள்ளது. வாசிம் ஜாபர் 126 ரன்கள் (176 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 40 வயதான ஜாபர் முதல்தர கிரிக்கெட்டில் பதிவு செய்த 55–வது சதம் (இதில் 5 டெஸ்ட் சதங்களும் அடங்கும்) இதுவாகும்.

கொல்கத்தாவில் நடந்த மணிப்பூர்–அருணாச்சலபிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் (பிளேட் பிரிவு) 2–வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் 273 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய அருணாச்சலபிரதேச அணி 160 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக 11–வது பேட்டிங் வரிசையில் ஆடிய தீனதயாள் உபத்யாய் 52 ரன்கள் (50 பந்து, 9 பவுண்டரி) எடுத்தார். 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மணிப்பூர் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த 3–வது வெற்றி இதுவாகும்.


Next Story