ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்


ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:15 PM GMT (Updated: 1 Jan 2019 10:07 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புக்குரிய மும்பை அணி இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

நாக்பூர்,

ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புக்குரிய மும்பை அணி இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

ரஞ்சி போட்டி

ரஞ்சி கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் விதர்பா–மும்பை (ஏ பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் நாக்பூரில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த விதர்பா அணி, வாசிம் ஜாபரின் (178 ரன்) சதத்தின் உதவியுடன் 511 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ‘பாலோ–ஆன்’ ஆனது. பின்னர் 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2–வது இன்னிங்சை விளையாடிய மும்பை அணி, விதர்பாவின் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 34.4 ஓவர்களில் 114 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக துருமில் மட்கர் 36 ரன்கள் எடுத்தார். விதர்பா இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வாத் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன் மூலம் விதர்பா அணி இன்னிங்ஸ் மற்றும் 145 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்ததுடன் 7 புள்ளியையும் தட்டிச்சென்றது.

மும்பை அணி ‘அவுட்’

எஞ்சிய இரு லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கால்இறுதி வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற நிலைமையில் விதர்பாவுக்கு எதிராக தோற்றதன் மூலம் 41 முறை சாம்பியனான மும்பை அணி போட்டியை விட்டு வெளியேறியது.

இந்த சீசனில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத மும்பை அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 டிரா, 5 தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அதே சமயம் 3 வெற்றி, 4 டிராவுடன் தங்களது பிரிவில் முதலிடத்தை (28 புள்ளி) பிடித்துள்ள விதர்பா அணி கால்இறுதியை உறுதி செய்தது.

குருணல் பாண்ட்யா அசத்தல்

கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் பெங்கால் அணிக்கு எதிரான (பி பிரிவு) லீக் ஆட்டத்தில் 20 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 301 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. ஹிமாத் சிங் (51 ரன்), சுபோத் பாதி (62 ரன், 5 பவுண்டரி, 6 சிக்சர்) அரைசதங்கள் அடித்தனர். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 322 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற பெங்கால் அணி இன்னும் 304 ரன்கள் எடுத்தாக வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொகாலியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கேரளாவுக்கு எதிராக 128 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 2–வது வெற்றியை பெற்றது. இதே போல் டெல்லியில் நடந்த ரெயில்வேக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இரண்டு இன்னிங்சிலும் சதம் நொறுக்கியதுடன் (160 ரன், 104 ரன்) மொத்தம் 6 விக்கெட்டுகளும் கைப்பற்றிய பரோடா ஆல்–ரவுண்டர் குருணல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Next Story