அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர்–12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது, இலங்கை


அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர்–12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது, இலங்கை
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 1 Jan 2019 10:20 PM GMT)

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சூப்பர்–12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை இலங்கை, வங்காளதேசம் அணிகள் இழந்துள்ளன.

துபாய்,

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சூப்பர்–12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை இலங்கை, வங்காளதேசம் அணிகள் இழந்துள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட்

7–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18–ந்தேதி முதல் நவம்பர் 15–ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் சூப்பர்–12 சுற்றுக்கு, 2018–ம் ஆண்டு டிசம்பர் 31–ந்தேதி நிலவரப்படி தரவரிசையில் டாப்–8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக தகுதி பெற முடியும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே கூறியிருந்தது.

இதன்படி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர்–12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்று இருப்பதாக ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.

நேரடி தகுதி இழப்பு

ஐ.சி.சி.யின் முழு நேர உறுப்பினர் அந்தஸ்து பெற்ற 18 மாதங்களிலேயே ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதியை எட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதே சமயம் தரவரிசையில் பின்தங்கிய அதாவது 9–வது மற்றும் 10–வது இடங்களை வகிக்கும் முன்னாள் சாம்பியன் இலங்கை, வங்காளதேச அணிகள் லீக் சுற்றில் விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சூப்பர்–12 சுற்றில் எஞ்சிய 4 இடங்களை நிரப்புவதற்கு 6 சிறிய அணிகளுடன், இலங்கையும், வங்காளதேசமும் இணைந்து லீக் சுற்றில் விளையாடும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்–12 சுற்றுக்கு முன்னேறும்.

இலங்கை கேப்டன் மலிங்கா கூறுகையில், ‘2020–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சூப்பர்–12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் லீக் சுற்றில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். மூன்று முறை இறுதிசுற்றில் விளையாடி, அதில் ஒரு முறை பட்டமும் வென்ற அணி (இலங்கை) டாப்–8 இடத்திற்குள் இருந்திருக்க வேண்டும் என்ற ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு இயல்பான ஒன்று தான். ஆனால் தற்போது லீக் சுற்றின் மூலம் கூடுதலான போட்டிகளில் விளையாடுவதை, நாக்–அவுட் சுற்றுக்கு நன்றாக தயாராவதற்கு வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம்’ என்றார்.

அல்–ஹசன் நம்பிக்கை

வங்காளதேச கேப்டன் ‌ஷகிப் அல்–ஹசன் கூறுகையில், ‘தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை அடைந்து அதில் நன்றாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்குரிய நாளாக அமைந்தால் எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீசை சமீபத்தில் அவர்களது இடத்திலேயே சாய்த்தோம். அந்த வெற்றி எங்களது 20 ஓவர் போட்டி அணியின் திறமை மீது நிறைய நம்பிக்கையை தந்துள்ளது’ என்றார்.


Next Story