முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி


முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி
x
தினத்தந்தி 22 Jan 2019 11:30 PM GMT (Updated: 22 Jan 2019 10:31 PM GMT)

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார் என இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.

நேப்பியர்,

இந்தியா - நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. எதிரணி 300 ரன்களுக்கு மேல் குவித்தாலும் பயப்படமாட்டோம் என்றும், அவர்களின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஆஸ்திரேயாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய கிரிக்கெட் அணி அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் நேப்பியரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இது என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உள்ளூரில் நியூசிலாந்து எப்போதும் வலுமிக்கது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை அந்த அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து 6 இன்னிங்சில் அரைசதம் விளாசியிருக்கும் ராஸ் டெய்லர் மற்றும் கேப்டன் வில்லியம்சன், காலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில், டாம் லாதம் உள்ளிட்டோர் சூப்பர் பார்மில் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் நியூசிலாந்து பலம் வாய்ந்ததாக காணப்படுவதால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2014-ம் ஆண்டு அங்கு விளையாடிய போது இந்திய அணி ஒரு நாள் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்திய வீரர்கள் ஆடுவார்கள் என்று நம்பலாம். ஆஸ்திரேலியாவை அலற வைத்த இந்திய அணி, நியூசிலாந்தையும் புரட்டியெடுக்குமா என்பதே ரசிகர்களின் ஆவலாகும்.

இதையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக எங்களது பேட்டிங் மிகவும் மேம்பட்டு இருக்கிறது. எங்களது திறமை என்ன என்பதை அறிவோம். அதனால் நியூசிலாந்தின் எல்லா வகையான சவாலுக்கும் தயாராக இருக்கிறோம். நியூசிலாந்து அணி எப்போதும் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் விளையாடும். அவர்கள் 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் போது, பயந்து விடக்கூடாது. அது தான் முக்கியம். நமது திறமை மீது நம்பிக்கை வைத்து இலக்கை விரட்டி பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதே போல் முதலில் பேட்டிங் செய்தால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதில் முனைப்பு காட்ட வேண்டும். கடந்த முறை (2014-ம் ஆண்டு) இங்கு விளையாடிய போது இது போன்ற சூழலில் பதற்றம் தொற்றிக்கொண்டது. இலக்கு 300 ரன்களை நெருங்கினாலும் கூட பதற்றம் இன்றி அமைதி காக்க வேண்டும். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சாதிக்க ஆர்வமாக உள்ளோம்.

நியூசிலாந்து உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கிறது. வீரர்கள் சமச்சீரான கலவையில் அமைந்துள்ள அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று. சில ஆண்டுகளாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த அணியில் வில்லியம்சன், ராஸ் டெய்லர் தவிர மேலும் சில சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதற்கு ஏற்ப வியூகங்களை வகுத்துள்ளோம்.

உலகின் சிறந்த அணியாக ஜொலிக்க வேண்டும் என்றால் அணியில் குறைந்தது 2 ஆல்-ரவுண்டர்கள் இருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா ஆட முடியாத நிலை வரும் போது, நாங்கள் 3-வது வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

நியூசிலாந்தில் உள்ள பெரும்பாலான மைதானங்கள் சிறியது. குறிப்பாக பக்கவாட்டு பவுண்டரி தூரம் குறைவாக இருக்கும். அதனால் இலகுவான பகுதியை குறி வைத்து பந்தை விரட்டியடிப்பது அவசியமாகும். இவ்வாறு கோலி கூறினார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘விராட் கோலி மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் அழகே அழகு தான். அதை வெகுவாக ரசிப்பேன். அவரை எனக்கு நீண்ட காலமாக தெரியும். தொடர்ச்சியாக ரன் குவித்து, உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அவரை கட்டுப்படுத்த முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த முயற்சியை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதே நேரத்தில் கோலி மட்டுமே எங்களது இலக்கு கிடையாது. அவரை தவிர்த்து மேலும் பல ‘மேட்ச் வின்னர்கள்’ இந்திய அணியில் உள்ளனர்’ என்றார்.

போட்டி நடக்கும் நேப்பியர் மெக்லீன் பார்க் ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. இங்கு 9 முறை 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டு உள்ளன. 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். 20 சதங்கள் பதிவாகியுள்ளன. இந்திய அணி இங்கு 6 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 121 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இந்த தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றினால் 2-வது இடத்துக்கு முன்னேறும். இந்தியா 3-வது இடத்துக்கு சரியும். இந்திய அணி 2-வது இடத்தை தக்க வைக்க குறைந்தது ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். இந்திய அணி தொடரை முழுமையாக வென்றால் 124 புள்ளிகளுடன் முதலிடத்தை நெருங்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), டோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் அல்லது கலீல் அகமது, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், காலின் டி கிரான்ட்ஹோம் அல்லது மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, லோக்கி பெர்குசன் அல்லது டக் பிரேஸ்வெல், டிரென்ட் பவுல்ட், சோதி.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய பெண்கள் அணியும்...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி ஆடுகிறது. இதன்படி நேப்பியரில் நாளை நடக்கும் (இந்திய நேரப்படி காலை 6.30 மணி) முதலாவது ஒரு நாள் போட்டியில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி, அமெ சட்டர்த்வெயிட் தலைமையிலான நியூசிலாந்தை சந்திக்கிறது.

இதுவரை....

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இதுவரை 101 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 51-ல் இந்தியாவும், 44-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 5 ஆட்டங்களில் முடிவு இல்லை. இவற்றில் நியூசிலாந்து மண்ணில் அந்த நாட்டு அணியுடன் 34 ஒரு நாள் போட்டிகளில் மோதியிருக்கும் இந்தியா அதில் 10-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

இந்திய அணி அங்கு நேரடி ஒரு நாள் தொடரில் பங்கேற்பது இது 8-வது முறையாகும். இதில் ஒரு முறை மட்டுமே ஒரு நாள் தொடரை வசப்படுத்தி இருக்கிறது. அந்த வரலாற்று வெற்றி 2009-ம் ஆண்டு டோனி தலைமையில் (3-1 என்ற கணக்கில்) கிடைத்தது. அந்த தொடரில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்ததும், அதில் சச்சின் தெண்டுல்கர் 163 ரன்கள் விளாசியதும் நினைவு கூரத்தக்கது.



Next Story