கிரிக்கெட்

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்:இந்திய அணி அபார வெற்றிநியூசிலாந்தை சுருட்டியது + "||" + முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி நியூசிலாந்தை சுருட்டியது

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்:இந்திய அணி அபார வெற்றிநியூசிலாந்தை சுருட்டியது

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்:இந்திய அணி அபார வெற்றிநியூசிலாந்தை சுருட்டியது
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
நேப்பியர், 

5 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி, நேப்பியரில் கடற்கரை அருகே அமைந்துள்ள மெக்லீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டதால், தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைக்கவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். சிறிய மைதானம், பேட்டிங்குங்கு உகந்த ஆடுகளம் மற்றும் வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணி என்பதால் நியூசிலாந்து ரன்மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பவுலர்கள் அவர்களை மிரள வைத்தனர்.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்திலும், காலின் முன்ரோவும் களம் புகுந்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பந்தை மிக துல்லியமாக, சரியான அளவில் வீசி நெருக்கடி கொடுத்தார். அவரது பந்து வீச்சில் இரண்டு அபாயகரமான ஆட்டக்காரர்களும் காலியானார்கள். கப்திலுக்கு (5 ரன்) பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. முன்ரோவுக்கு (8 ரன்) பந்து ‘இன்ஸ்விங்’ ஆகி கிளன் போல்டு ஆனார்.

18 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த நியூசிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க, கேப்டன் கேன் வில்லியம்சனும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் போராடினர். தொடர்ச்சியாக 6 அரைசதங்கள் அடித்திருந்த டெய்லர் இந்த முறை சோபிக்கவில்லை. அவர் 24 ரன்களில் (41 பந்து) யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் அவரிடமே சிக்கினார்.

மிடில் ஓவர்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முற்றிலும் நிலைகுலைந்தனர். கேப்டன் வில்லியம்சன் மட்டும் பந்தை கணித்து நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடினார். ஆனால் அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் நியூசிலாந்து அணியால் 200 ரன்களை கூட நெருங்க முடியாமல் போனது. 36-வது அரைசதத்தை கடந்த வில்லியம்சன் 64 ரன்களில் (81 பந்து, 7 பவுண்டரி) குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சில் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். பின்வரிசை ஆட்டக்காரர்கள் யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.

முடிவில் நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் 157 ரன்னில் சுருண்டது. இந்த மைதானத்தில் நியூசிலாந்து அணியின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 11 ரன்னில் (24 பந்து) ஸ்லிப்பில் நின்ற கப்திலிடம் கேட்ச் ஆனார். பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானுடன், கேப்டன் விராட் கோலி கைகோர்த்தார். இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்த போது சூரிய ஒளியின் தாக்கத்தினால் ஆட்டம் 37 நிமிடம் நிறுத்தப்பட்டது. இதனால் ‘டக்வெர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி இந்திய அணி 49 ஓவர்களில் 156 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இதை நோக்கி கோலியும், தவானும் தொடர்ந்து ஆடினர். சிறிய மைதானம் என்பதால் சில ஷாட்டுகளில் பந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லைக்கோட்டை தொட்டன. தவான் 31 ரன்னில் சற்று எழும்பி வந்த பந்தை அடித்த போது அது பேட்டின் விளிம்பில் பட்டு எகிறியது. அதிர்ஷ்டவசமாக அந்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டாம் லாதம் நழுவ விட்டார். குறைவான இலக்கு என்பதால் இருவரும் அவசரம் காட்டாமல் ஏதுவான பந்துகளை மட்டும் ரன்னாக மாற்றினர். அபாரமாக ஆடிய தவான் தனது 26-வது அரைசதத்தை எட்டினார்.

ஸ்கோர் 132 ரன்களாக உயர்ந்த போது, விராட் கோலி 45 ரன்களில் (59 பந்து, 3 பவுண்டரி) விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து தவானும், அம்பத்தி ராயுடுவும் இணைந்து இலக்கை எட்ட வைத்தனர். இந்திய அணி 34.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.

தவான் 75 ரன்களுடனும் (103 பந்து, 6 பவுண்டரி), அம்பத்தி ராயுடு 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்தின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்து மூன்று முன்னணி விக்கெட்டுகளை கபளகரம் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

நியூசிலாந்து

மார்ட்டின் கப்தில் (பி) ஷமி5

காலின் முன்ரோ (பி) ஷமி 8

வில்லியம்சன் (சி) சங்கர் (பி)

குல்தீப் 64

டெய்லர் (சி)அண்ட்(பி)சாஹல் 24

டாம் லாதம்(சி)அண்ட்(பி)சாஹல் 11

நிகோல்ஸ்(சி)குல்தீப்(பி)ஜாதவ்12

சான்ட்னெர் எல்.பி.டபிள்யூ

(பி) ஷமி 14

பிரேஸ்வெல் (சி) குல்தீப்7

டிம் சவுதி (நாட்-அவுட்)9

பெர்குசன் (ஸ்டம்பிங்) டோனி

(பி) குல்தீப் 0

டிரென்ட் பவுல்ட் (சி) ரோகித்

(பி) குல்தீப் 1

எக்ஸ்டிரா2

மொத்தம் (38 ஓவர்களில்

ஆல்-அவுட்) 157

விக்கெட் வீழ்ச்சி: 1-5, 2-18, 3-52, 4-76, 5-107, 6-133, 7-146, 8-146, 9-148

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார்5-0-20-0

முகமது ஷமி6-2-19-3

விஜய் சங்கர்4-0-19-0

யுஸ்வேந்திர சாஹல்10-0-43-2

குல்தீப் யாதவ்10-1-39-4

கேதர் ஜாதவ்3-0-17-1

இந்தியா

ரோகித் சர்மா (சி) கப்தில்

(பி) பிரேஸ்வெல் 11

ஷிகர் தவான் (நாட்-அவுட்) 75

விராட் கோலி (சி) லாதம் (பி)

பெர்குசன் 45

அம்பத்தி ராயுடு (நாட்-அவுட்) 13

எக்ஸ்டிரா 12

மொத்தம் (34.5 ஓவர்களில்

2 விக்கெட்டுக்கு) 156

விக்கெட் வீழ்ச்சி: 1-41, 2-132

பந்து வீச்சு விவரம்

டிரென்ட் பவுல்ட்6-1-19-0

டிம் சவுதி6.5-0-36-0

லோக்கி பெர்குசன்8-0-41-1

பிரேஸ்வெல்7-0-23-1

சான்ட்னெர்7-0-32-0