பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையை சுருட்டியது ஆஸ்திரேலியா


பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையை சுருட்டியது ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 26 Jan 2019 9:30 PM GMT (Updated: 26 Jan 2019 6:59 PM GMT)

பிரிஸ்பேனில் நடந்த பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3–வது நாளிலேயே இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்தது.

பிரிஸ்பேன், 

பிரிஸ்பேனில் நடந்த பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3–வது நாளிலேயே இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்தது.

டெஸ்ட் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் பகல்–இரவு மோதலாக கடந்த 24–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 144 ரன்களும், ஆஸ்திரேலியா 323 ரன்களும் எடுத்தன. 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2–வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 17 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் மிரண்டனர். கேப்டன் சன்டிமால் (0), குசல் மென்டிஸ் (1 ரன்), ரோ‌ஷன் சில்வா (3 ரன்) ஆகிய பிரதான பேட்ஸ்மேன்கள், பேட் கம்மின்சின் புயல் வேகத்தில் சரிந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக திரிமன்னே 32 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா வெற்றி

2–வது இன்னிங்சில் இலங்கை அணி 50.5 ஓவர்களில் 139 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாக பதிவானது. முன்னதாக முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் எடுத்திருந்த அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணி இதுவரை பகல்–இரவு டெஸ்ட் போட்டிகளில் தோற்றதில்லை. அந்த பெருமையை (இது 5–வது வெற்றி) தக்க வைத்துக் கொண்டது. அதே சமயம் ஆஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணி டெஸ்டில் வெற்றி பெற்றது கிடையாது. அந்த சோகம் தொடருகிறது.

இலங்கை–ஆஸ்திரேலியா இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 1–ந்தேதி கான்பெர்ராவில் தொடங்குகிறது.


Next Story