நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? 4-வது ஆட்டம் ஹாமில்டனில் இன்று நடக்கிறது


நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? 4-வது ஆட்டம் ஹாமில்டனில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 8:40 PM GMT)

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.

ஹாமில்டன், 

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் கம்பீரமாக முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.

பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார்.

முதல் 3 ஆட்டங்களையும் எடுத்துக் கொண்டால் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் இந்திய வீரர்கள் அட்டகாசப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (160 ரன்), ஷிகர் தவான் (169 ரன்) ஆகியோரின் சிறப்பான தொடக்கமும், குல்தீப் யாதவ் (8 விக்கெட்), முகமது ஷமி (7 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (6 விக்கெட்) உள்ளிட்டோரின் மிரட்டல் பந்து வீச்சும் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன.

அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் விளையாட இந்திய அணி தீவிரமாக இருக்கிறது. இந்திய அணி 1967-ம் ஆண்டு முதல் நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. அங்கு எந்த ஒரு தொடரிலும் (மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து) இந்திய அணி 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது கிடையாது. அதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வாகை சூடினால், அது நமக்கு புதிய வரலாற்று சாதனையாக அமையும்.

முந்தைய ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காரணமாக விக்கெட் கீப்பர் டோனி ஆடவில்லை. அவர் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டாலும் களம் இறங்குவது சந்தேகம் தான் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஜூனியர் உலக கோப்பையை வென்றுத் தந்த இந்திய இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் அறிமுக வீரராக இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் வெகுவாக மேம்பட்டுள்ளது. பீல்டிங் யுக்திக்கு இந்திய வீரர்கள் இப்போது எந்திரத்தையும் பயன்படுத்துகிறார்கள். அந்த எந்திரத்தில் பந்துகளை போட்டு, அது வேகமாக தள்ளும் போது அதை கண்ணிமைக்கும் நேரத்தில் தடுத்து நிறுத்தியும், கேட்ச் செய்தும் பயிற்சி எடுக்கிறார்கள். இது மிகவும் அனுகூலமாக இருப்பதாக இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் நேற்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘வேட்கை தளராமல் வெற்றிப்பயணத்தை தொடர விரும்புகிறோம். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி இன்னும் 7 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அதனால் வெளியில் உள்ள வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும். போதுமான வாய்ப்பு கொடுக்காமல், உலக கோப்பை கிரிக்கெட்டில் திடீரென முக்கியான ஆட்டத்தில் களம் காண வாய்ப்பு வழங்கும் நெருக்கடியான சூழலை கொண்டு வந்து விடக்கூடாது. அவர்களும் உலக கோப்பைக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். இது பற்றி அணி நிர்வாகம் யோசிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

நியூசிலாந்தில் உள்ளது போன்ற சீதோஷ்ண நிலை தான் இங்கிலாந்திலும் (உலக கோப்பை நடக்கும் இடம்) காணப்படும். அதனால் உலக கோப்பைக்கு நம்மை தயார்படுத்துவதற்கு நியூசிலாந்தை விட சிறந்த இடம் இருக்க முடியாது என்றும் ஸ்ரீதர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை தொடர்ச்சியான தோல்விகளால் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இந்த தொடருக்கு முன்பாக உள்ளூரில் இலங்கைக்கு எதிராக மூன்று ஆட்டங்களிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றது. ஆனால் இந்திய பவுலர்களிடம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் பாச்சா பலிக்கவில்லை. நியூசிலாந்து அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோற்ற நிகழ்வு கடைசியாக 2005-ம் ஆண்டு நடந்தது. அந்த மோசமான நிலை மறுபடியும் நிகழாத வண்ணம் சரிவில் இருந்து மீள்வதில் அந்த அணி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தோல்வி எதிரொலியாக அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வலு சேர்க்கும் வகையில் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் அழைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய அணியில் விராட் கோலி இல்லை. இதை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியமாகும். மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி எங்களை முற்றிலும் தோற்கடித்து விட்டது. சிறந்த அணியாக இருந்தும் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. வெவ்வேறான சீதோஷ்ண நிலையிலும் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்திய வீரர்கள் காட்டி விட்டனர். நாங்கள் அந்த அளவுக்கு செயல்படவில்லை. ஆனாலும் கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று, அதில் கிடைக்கும் நம்பிக்கையுடன் வெலிங்டனுக்கு செல்வோம் என்று நம்புகிறேன்’ என்றார்.

ஹாமில்டனில் இந்திய அணி இதுவரை 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 3-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 5-ல் மோதி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

நியூசிலாந்து அணி இங்கு 28 ஆட்டங்களில் விளையாடி 19-ல் வெற்றி பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுக்கு 363 ரன்கள் குவித்தது அதிகபட்சமாகும். 2003-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 122 ரன்னில் சுருண்டது இங்கு ஒரு அணியின் குறைந்த பட்சமாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி அல்லது சுப்மான் கில், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டாட் ஆஸ்ட்லே, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story