நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி பவுல்ட் மிரட்டல் பந்து வீச்சு


நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி பவுல்ட் மிரட்டல் பந்து வீச்சு
x
தினத்தந்தி 31 Jan 2019 11:15 PM GMT (Updated: 31 Jan 2019 9:50 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

ஹாமில்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. தசைப்பிடிப்பால் அவதிப்படும் விக்கெட் கீப்பர் டோனி முழுமையாக குணமடையாததால் சேர்க்கப்படவில்லை. கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், ரோகித் சர்மா கேப்டன் பதவியை ஏற்றார். கோலிக்கு பதிலாக புதுமுக வீரர் சுப்மான் கில்லும், முகமது ஷமிக்கு பதிலாக கலீல் அகமதுவும் இடம் பிடித்தனர். 19 வயதான பஞ்சாப்பை சேர்ந்த சுப்மான் கில்லுக்கு இது முதல் சர்வதேச போட்டியாகும். இவர் இந்தியாவின் 227-வது ஒரு நாள் போட்டி வீரர் ஆவார்.

நியூசிலாந்து அணியில் 4 மாற்றமாக காலின் முன்ரோ, பெர்குசன், பிரேஸ்வெல், சோதி கழற்றி விடப்பட்டு அவர்களது இடத்தில் ஜேம்ஷ் நீஷம், டாட் ஆஸ்ட்லே, கிரான்ட்ஹோம், மேட் ஹென்றி ஆகியோர் இடம் பெற்றனர். ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இந்த அளவுக்கு சொதப்பும் என்று யாரும் நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள். முதல் 3 ஆட்டங்களில் உச்சத்திற்கு சென்ற இந்திய அணி, இந்த ஆட்டத்தில் துளியும் போராட்டம் இன்றி ஒரேயடியாக அதள பாதாளத்திற்குள் விழுந்து விட்டது.

ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஆக்ரோஷமாக பந்து வீசி இந்திய பேட்டிங் வரிசையை சீர்குலைத்தார். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் பந்து பவுன்சுடன் நன்கு ஸ்விங்கும் ஆனது. அதனால் பந்து ‘பிட்ச்’ ஆனதும் எப்படி திரும்புகிறது என்பதை துல்லியமாக கணிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திண்டாடினர். ஷிகர் தவான் (13 ரன், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) பவுல்ட் வீசிய இன்ஸ்விங்கரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். தனது 200-வது ஒரு நாள் போட்டியில் கால்பதித்த கேப்டன் ரோகித் சர்மா (7 ரன்) பந்து வீசிய பவுல்ட்டிடமே பிடிபட்டார். விராட் கோலியால் வானளாவிய அளவுக்கு புகழப்பட்ட சுப்மான் கில்லும் (9 ரன், 21 பந்து) நிலைக்கவில்லை.

பவுல்ட்டுக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த காலின் கிரான்ட்ஹோமும் பந்தை ‘ஸ்விங்’ ஜாலம் காட்டி மிரட்ட தவறவில்லை. மிடில் வரிசையில் அணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த அம்பத்தி ராயுடும் (0), தினேஷ் கார்த்திக்கும் (0) ஆப்-சைடுக்கு வெளியில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். 33 ரன்னுக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை தாரை வார்த்து ஊசலாடியது.

இது போன்ற ஆடுகளத் தன்மையில் பந்தை சாதுர்யமாக கவனித்து நிதானமாக ஆட வேண்டியது முக்கியமாகும். ஆனால் நமது பேட்ஸ்மேன்களோ சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் தங்களது பெயரில் கணிசமான ரன்களை பதிவு செய்து விட்டால் போதும் என்ற நோக்கத்துடன் அவசரகதியில் ஆடி விக்கெட்டுகளை கோட்டை விட்டனர். பவுல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி ஓட விட்ட ஹர்திக் பாண்ட்யா (16 ரன்) அவரது இன்னொரு ஓவரில் காலியானார். கேதர் ஜாதவும் (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அனுபவம் வாய்ந்த விராட் கோலி, டோனி இல்லாததன் பாதிப்பை வெகுவாக உணர முடிந்தது.

55 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் தத்தளித்த இந்திய அணிக்கு 9-வது விக்கெட்டுக்கு இணைந்து ஆடிய குல்தீப் யாதவும் (15 ரன், 33 பந்து), யுஸ்வேந்திர சாஹலும் (18 ரன், 37 பந்து) சற்று ஆறுதல் அளித்தனர். சாஹலின் ரன்களே, இந்தியாவின் இன்னிங்சில் அதிகபட்சமாகும்.

முடிவில் இந்திய அணி 30.5 ஓவர்களில் வெறும் 92 ரன்னில் சுருண்டது. இந்த மைதானத்தில் ஒரு அணி 100 ரன்னுக்குள் முடங்கிப்போனது இதுவே முதல் முறையாகும். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 10 ஓவர்களில் 4 மெய்டனுடன் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் களம் புகுந்தனர். புவனேஸ்வர்குமார் வீசிய முதல் பந்தை சிக்சர், அடுத்த இரு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியடித்த கப்தில் (14 ரன்) 4-வது பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்னில் வெளியேறினார். இதன் பின்னர் நிகோல்சும் (30 ரன், 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ராஸ் டெய்லரும் (37 ரன், 2 பவுண்டரி, 3 சிக்சர்) கைகோர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. டிரென்ட் பவுல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்துக்கு இது ஆறுதல் வெற்றியாகவே இருந்தது. ஏனெனில் முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி கண்டு தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 3-ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது.

5 விக்கெட்டுகளை அறுவடை செய்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 5-வது நிகழ்வாகும். இதன் மூலம் இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் அதிக முறை விக்கெட் எடுத்த நியூசிலாந்து பவுலரான ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையை சமன் செய்தார்.

29 வயதான டிரென்ட் பவுல்ட் சொந்த மண்ணில் இதுவரை 102 விக்கெட்டுகள் (49 ஆட்டம்) வீழ்த்தி இருக்கிறார். குறிப்பிட்ட நாட்டில் 100 விக்கெட்டுகளை வேகமாக எட்டிய பவுலர் இவர் தான். இதற்கு முன்பு பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 53 ஆட்டங்களில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இச்சாதனையை வக்கார் யூனிஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் செய்திருந்தார்.

ஸ்கோர் போர்டு - இந்தியா

ரோகித் சர்மா (சி) அண்ட் (பி) பவுல்ட் 7

ஷிகர் தவான் எல்.பி.டபிள்யூ (பி) பவுல்ட் 13

சுப்மான் கில் (சி) அண்ட் (பி) பவுல்ட் 9

அம்பத்தி ராயுடு (சி) கப்தில் (பி) கிரான்ட்ஹோம் 0

தினேஷ் கார்த்திக் (சி) லாதம் (பி) கிரான்ட்ஹோம் 0

கேதர் ஜாதவ் எல்.பி.டபிள்யூ (பி) பவுல்ட் 1

ஹர்திக் பாண்ட்யா (சி) லாதம் (பி) பவுல்ட் 16

புவனேஷ்வர்குமார் (பி) கிரான்ட்ஹோம் 1

குல்தீப் யாதவ் (சி) கிரான்ட்ஹோம் (பி) ஆஸ்ட்லே 15

யுஸ்வேந்திர சாஹல் (நாட்–அவுட்) 18

கலீல் அகமது (பி) நீ‌ஷம் 5

எக்ஸ்டிரா 7

மொத்தம் (30.5 ஓவர்களில் ஆல்–அவுட்) 92

விக்கெட் வீழ்ச்சி: 1–21, 2–23, 3–33, 4–33, 5–33, 6–35, 7–40, 8–55, 9–80


பந்து வீச்சு விவரம்

மேட் ஹென்றி 8–2–30–0

டிரென்ட் பவுல்ட் 10–4–21–5

கிரான்ட்ஹோம் 10–2–26–3

டாட் ஆஸ்ட்லே 2–0–9–1

ஜேம்ஸ் நீ‌ஷம் 0.5–0–5–1

நியூசிலாந்து

கப்தில் (சி) பாண்ட்யா (பி) புவனேஷ்வர் 14

நிகோல்ஸ் (நாட்–அவுட்) 30

வில்லியம்சன் (சி) கார்த்திக் (பி) புவனேஷ்வர் 11

ராஸ் டெய்லர் (நாட்–அவுட்) 37

எக்ஸ்டிரா 1

மொத்தம் (14.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு) 93

விக்கெட் வீழ்ச்சி 1–14, 2–39

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 5–1–25–2

கலீல் அகமது 3–0–19–0

ஹர்திக் பாண்ட்யா 3–0–15–0

யுஸ்வேந்திர சாஹல் 2.4–0–32–0

குல்தீப் யாதவ் 1–0–2–0

இந்தியாவின் குறைந்த ஸ்கோர்

ஹாமில்டனில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்னில் ‘சரண்’ அடைந்தது. ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய அணியின் 7–வது மோசமான ஸ்கோர் இதுவாகும். 100 ரன்களுக்குள் இந்திய அணி அடங்கிப்போன ஆட்டங்கள் விவரம் வருமாறு:–

ரன் எதிரணி இடம் ஆண்டு

54 இலங்கை சார்ஜா 2000

63 ஆஸ்திரேலியா சிட்னி 1981

78 இலங்கை கான்பூர் 1986

79 பாகிஸ்தான் சியல்கோட் 1978

88 நியூசிலாந்து தம்புல்லா 2010

91 தென்ஆப்பிரிக்கா டர்பன் 2006

92 நியூசிலாந்து ஹாமில்டன் 2019



Next Story