தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 7:27 PM GMT)

டர்பனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது.

டர்பன், 

டர்பனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது.

டெஸ்ட் கிரிக்கெட்

இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 235 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கருணாரத்னே 28 ரன்னுடனும், ஒஷாடே பெர்னாண்டோ 17 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினர். ஒஷாடே பெர்னாண்டோ 19 ரன்னிலும், கருணாரத்னே 30 ரன்னிலும் எல்.பி.டபிள்யூ. ஆகி நடையை கட்டினர்.

இலங்கை 191 ரன்

மிடில் வரிசையில் குசல் பெரேரா (51 ரன், 63 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். தேனீர் இடைவேளைக்கு முன்பாக இலங்கை அணி முதல் இன்னிங்சில் 59.2 ஓவர்களில் 191 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின் 4 விக்கெட்டுகளும், பிலாண்டர், ரபடா தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

44 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஜோடி 36 ரன்கள் (10 ஓவர்) சேர்த்தது. தொடக்க கூட்டணி உடைந்ததும், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். மார்க்ராம் (28 ரன்), அம்லா (16 ரன்), டீன் எல்கர் (35 ரன்), பவுமா (3 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர்.

ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 37 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து மொத்தம் 170 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (25 ரன்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (15 ரன்) களத்தில் உள்ளனர். இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

இன்று 3–வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story