உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்? கவாஸ்கர் ஆருடம்


உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்? கவாஸ்கர் ஆருடம்
x
தினத்தந்தி 16 Feb 2019 9:30 PM GMT (Updated: 16 Feb 2019 8:43 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பும்ரா, முகமது ‌ஷமி, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய 13 பேர் நிச்சயம் இடம் பிடிப்பார்கள் என்று நம்புகிறேன். 14–வது வீரராக ஆல்–ரவுண்டர் விஜய் சங்கர் இருப்பார். ஏனெனில் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகும். அதனால் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்–ரவுண்டருடன் விளையாட முடியும். 15–வது வீரர் வரிசைக்கு கலீல் அகமது, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம்.

அணியில் எந்த வரிசையிலும் பேட் செய்யும் தகுதியுடன் வீரர்கள் இருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாடி இருக்கிறார். ஒரு நாள் போட்டியிலும் அவரால் தொடக்க ஆட்டக்காரராக ஆட முடியும்.

இந்த உலக கோப்பையை வெல்வதற்கு இங்கிலாந்து அணிக்கே அதிக வாய்ப்புள்ளது. உள்ளூர் சீதோஷ்ண நிலைக்கு அவர்களுக்கு சாதகமானது. அது மட்டுமின்றி 2015–ம் ஆண்டு உலக கோப்பையில் லீக் சுற்றில் தோற்றதும் அவர்களின் ஆட்ட அணுகுமுறை முற்றிலும் மாறி விட்டது. இப்போது மிகவும் வலுவான அணியாக உருவெடுத்துள்ளனர்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் கழற்றி விட்டதால் உலக கோப்பை அணியிலும் இடம் கிடைப்பது சந்தேகம் தான் என்று கூறப்படும் நிலையில், உலக கோப்பைக்கான மாற்று தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு லோகேஷ் ராகுல், ரஹானே, ரிஷாப் பான்ட் ஆகியோரை காட்டிலும் தினேஷ் கார்த்திக்குக்கு கவாஸ்கர் முன்னுரிமை வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.


Next Story