உலக கோப்பையுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து கெய்ல் ஓய்வு பெறுகிறார்


உலக கோப்பையுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து கெய்ல் ஓய்வு பெறுகிறார்
x
தினத்தந்தி 18 Feb 2019 2:12 AM GMT (Updated: 18 Feb 2019 11:00 PM GMT)

உலக கோப்பையுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.

ஜமைக்கா,

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 2014-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆடிய கெய்ல் அதன் பிறகு காயம் காரணமாக வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடம் பெறவில்லை.

39 வயதான கெய்ல் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது. இது அவருக்கு 5-வது உலக கோப்பை போட்டியாகும்.

1999-ம் ஆண்டு டோராண்டோவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான கெய்ல் இதுவரை 284 ஒரு நாள் போட்டியில் விளையாடி 23 சதம், 49 அரைசதங்களுடன் 9,727 ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் என்ற பெருமைக்குரிய கெய்ல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 476 சிக்சர்கள் அடித்து பாகிஸ்தான் வீரர் அப்ரிடியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். கெய்ல் மேலும் 679 ரன்கள் சேர்த்தால் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ள லாராவின் (10,405 ரன்கள்) சாதனையை தகர்ப்பார்.

இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பதிவில் ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெறும் உலக கோப்பை போட்டி தான் கெய்லுக்கு கடைசி ஒரு நாள் போட்டியாகும்’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஓய்வு முடிவு குறித்து கெய்ல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் உலகின் தலைசிறந்த வீரராக விளங்கி வருகிறேன். இன்றும் பிரபஞ்சத்தின் தலைவன் நான் தான். அது ஒருபோதும் மாறாது. அந்த பெருமை எப்பொழுதும் என்னுடன் இருக்கும். வரும் உலக கோப்பை போட்டியுடன் எனது ஒரு நாள் ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இளைஞர்களின் ஆட்டத்தை வெளியில் இருந்து ரசிக்க விரும்புகிறேன்.

உலக கோப்பையை வென்று விடைபெற்றால் அது அற்புதமான முடிவாக இருக்கும். இளம் வீரர்கள் எனக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே எனது பங்களிப்பை நன்றாக அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் நல்ல உடல் தகுதியுடன் உள்ளேன். இளைஞர் போல் களத்தில் வேகமாக செயல்பட முயற்சித்து வருகிறேன். ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியும் என்று நினைக்கிறேன்.

எப்பொழுதும் டெஸ்ட் கிரிக்கெட் தலைசிறந்ததாகும். இளம் வீரர்கள் அனைவரும் 20 ஓவர் போட்டியில் விளையாடுவதில் தான் ஆர்வமாக உள்ளனர். இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட முயற்சிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். டெஸ்ட் போட்டியில் விளையாடினால் சவால் நிறைந்த வீரராக உருவெடுக்க வாய்ப்பு கிடைக்கும். வெஸ்ட்இண்டீஸ் அணியின் சீருடையை மீண்டும் அணிய இருப்பது மிகவும் முக்கியமானதாகும். அதனை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். எனது ஆட்ட அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன். வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியினருடன் அடுத்த சில மாதங்களை அனுபவிக்க முடியும் என்று நம்புகிறேன்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்க முடியும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் எந்த பவுலர் தொடக்க ஓவர்களை வீசுவார்கள் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 39 வயதானாலும் எனது அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது. எத்தகைய பந்து வீச்சையும் என்னால் துவம்சம் செய்ய முடியும். ஓய்வுக்கு பிறகு என்ன செய்யப்போகிறேன் என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. வர்ணனையாளராகவோ, பயிற்சியாளராகவோ ஆகும் திட்டம் இல்லை. இவ்வாறு கெய்ல் கூறினார்.

Next Story