கிரிக்கெட்

4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல் + "||" + In the 4th one-day cricket match Conflict between India and Australia today

4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்

4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.

மொகாலி, 

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.

ஒரு நாள் கிரிக்கெட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3–வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்–இரவு மோதலாக நடக்கிறது.

ஐதராபாத், நாக்பூரில் அசத்திய இந்திய அணி, நேற்று முன்தினம் ராஞ்சியில் நடந்த ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி சூப்பர் பார்மில் உள்ளார். கடந்த 2 ஆட்டங்களிலும் அவர் சதம் அடித்து பிரமாதப்படுத்தினார். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (3 ஆட்டத்தில் 22 ரன்), மிடில் வரிசையில் ஆடும் அம்பத்தி ராயுடு (3 ஆட்டத்தில் 33 ரன்) ஆகியோரின் பேட்டிங் மிக மோசமாக இருக்கிறது. அதனால் இன்றைய ஆட்டத்தில் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் இடம் பெற வாய்ப்புள்ளது.

டோனிக்கு ஓய்வு

எஞ்சிய இரண்டு ஒரு நாள் போட்டிக்கு இந்திய மூத்த விக்கெட் கீப்பர் டோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை இளம் வீரர் ரிஷாப் பான்ட் கவனிப்பார். 3–வது ஆட்டத்தின் போது பந்து காலில் தாக்கியதால் வலியால் அவதிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமிக்கு முன் எச்சரிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டு, புவனேஷ்குமார் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்த தொடரில் இந்திய அணிக்கு அவ்வப்போது சில சறுக்கல் ஏற்பட்டன. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 99 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளும், 3–வது ஒரு நாள் போட்டியில் 27 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியதை சுட்டிக்காட்டிய கேப்டன் விராட் கோலி, இந்த மாதிரி விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழப்பதை எந்த அணியும் விரும்பாது என்றும், அடுத்த போட்டிகளில் இந்த தவறுகளை திருத்திக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார். இந்த ஆட்டத்துடன் தொடரை வசப்படுத்துவதில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

ஆஸ்திரேலியா உற்சாகம்

ஆஸ்திரேலிய அணி முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ளது. அதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த அணி 300 ரன்களுக்கு மேல் குவித்து புது நம்பிக்கையை பெற்று இருக்கிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் பார்முக்கு திரும்பியிருப்பது பேட்டிங்குக்கு மேலும் வலு சேர்க்கும். பந்து வீச்சில் கம்மின்ஸ், ஜெயே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

தொடரை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் அந்த அணி வீரர்கள் எல்லா வகையிலும் சவால் அளிக்க வரிந்து கட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மைதானம் எப்படி?

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடி அதில் 10–ல் வெற்றியும், 5–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியா இங்கு 6 ஆட்டங்களில் ஆடி 5–ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. இவற்றில் இந்தியாவுடன் 4 ஆட்டங்களில் மோதி இருக்கும் ஆஸ்திரேலியா அதில் 3–ல் வெற்றி பெற்று இருக்கிறது. 2017–ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி 392 ரன்கள் குவித்தது இங்கு ஒரு அணியின் அதிகபட்சமாகும். இதே ஆட்டத்தில் ரோகித் சர்மா 208 ரன்கள் விளாசியது தனிநபர் அதிகபட்சமாகும்.

இது பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

பிற்பகல் 1.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார் அல்லது முகமது ‌ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, கம்மின்ஸ், நாதன் லயன், ஜெயே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.