உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 April 2019 11:00 PM GMT (Updated: 3 April 2019 7:24 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் சோதி, அனுபவம் இல்லாத விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கிறைஸ்ட்சர்ச்,

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் நியூசிலாந்து தான் முதலாவதாக வீரர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

பிரதான சுழற்பந்து வீச்சாளராக, காயத்தில் இருந்து மீண்ட மிட்செல் சான்ட்னெர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2-வது சுழற்பந்து வீச்சாளராக டாட் ஆஷ்லேவுக்கு பதிலாக ஆச்சரியம் அளிக்கும் வகையில் சோதி சேர்க்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் டாம் லாதமுக்கு மாற்றாக செயல்பட்டு வந்த டிம் செய்பெர்ட் காயம் அடைந்து இருப்பதால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மாற்று விக்கெட் கீப்பராக டாம் பிளன்டெல் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். 28 வயதான டாம் பிளன்டெல் 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஒரு நாள் போட்டியில் அவர் களம் கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர் கருத்து

அணி வீரர்கள் தேர்வு குறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில் ‘பெரிய போட்டிக்கான அணியை தேர்வு செய்யும் போது, சில கடினமாக முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். அது சில வீரர்களுக்கு ஏமாற்றமாகவும் அமையலாம். ஆனால் அணியில் வீரர்கள் சரிசமமான கலவையில் இருக்க வேண்டும் என்பதே முக்கியமானதாகும். ஒரு நாள் போட்டியை பொறுத்தமட்டில் எங்கள் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனுபவம் வாய்ந்த எங்கள் வீரர்கள் உலக கோப்பை போட்டியிலும் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டின் உச்சகட்டமான உலக கோப்பை போட்டிக்கான அணியை நாங்கள் முதலில் அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பை போட்டியில், தேசத்துக்காக பங்கேற்பது மிகப்பெரிய கவுரவமாகும்.

உலக கோப்பை போட்டி சவாலை எதிர்கொள்ள எங்கள் அணியினர் தயாராக உள்ளனர். இந்த மாதத்தில் எங்கள் அணியினருக்கு உள்ளூரில் 3 பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் அணியில் இடம் பெறாத வீரர்களும் கலந்து கொள்வார்கள். வீரர்கள் யாராவது காயம் அடைந்து மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதனை சமாளிக்க பயிற்சி முகாமுக்கு அணியில் இடம் பெறாத வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

வீரர்கள் விவரம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் வருமாறு:-

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், ராஸ் டெய்லர், டாம் லாதம், காலின் முன்ரோ, டாம் பிளன்டெல், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

Next Story