பெங்களூரு அணி தொடர்ந்து 4-வது தோல்வி: வெற்றிக்கணக்கை தொடங்கிவிட்டால் நிலைமை மாறிவிடும் விராட் கோலி சொல்கிறார்


பெங்களூரு அணி தொடர்ந்து 4-வது தோல்வி: வெற்றிக்கணக்கை தொடங்கிவிட்டால் நிலைமை மாறிவிடும் விராட் கோலி சொல்கிறார்
x
தினத்தந்தி 3 April 2019 11:15 PM GMT (Updated: 2019-04-04T00:58:24+05:30)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிக்கணக்கை தொடங்கி விட்டால், அதன் பிறகு மோசமான நிலைமை மாறி விடும் என்று பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்து முதலாவது வெற்றியை பெற்றது. இதில் பெங்களூரு அணி நிர்ணயித்த 159 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லர் (59 ரன்), ஸ்டீவன் சுமித் (38 ரன்), திரிபாதி (34 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் 19.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்த ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி பெங்களூரு தான். தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த நிலையில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

நாங்கள் 15 முதல் 25 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். மார்கஸ் ஸ்டோனிசும் (31 ரன்), மொயீன் அலியும் (18 ரன்) ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். இருப்பினும் பனியின் தாக்கம் இருந்த நிலையில் 15 ரன் கூடுதலாக எடுத்திருந்தால் நிச்சயம் அது சவாலான ஸ்கோராக இருந்திருக்கும். அது மட்டுமின்றி இந்த ஆடுகளத்தில் 2-வது இன்னிங்சின் போது பவுண்டரி அடிப்பது எளிதாக இருக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் நாங்கள் நழுவ விட்ட கேட்ச் (3 கேட்ச் விட்டனர்) வாய்ப்புகள் பின்னடைவாகி போனது. ஐ.பி.எல். போன்ற தொடர்களில் போதிய உத்வேகம் இல்லை என்றால், அதன் பிறகு தோல்வி தான் ஏற்படும்.

வெற்றி தேவை

இந்த தொடர் நீண்ட காலம் நடக்கும் போட்டி அல்ல. ஒன்றரை மாதங்களிலோ அல்லது 2 மாதங்களிலோ முடிந்து விடக்கூடியது. அதனால் அணியை முன்னெடுத்துச் செல்ல சிறந்த சரியான கலவையில் வீரர்கள் இருக்க வேண்டியது முக்கியம். அது தான் இன்னும் குறைபாடாக இருக்கிறது. களம் இறங்குவதற்கு பொருத்தமான வீரர்கள் யார்? அவர்களை அடையாளம் காண என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசிப்பேன்.

அணிக்கு சில புதிய வீரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் அணி வெற்றி பெறும் அளவுக்கு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் சரியான லெவன் வீரர்களை இறக்கி சவால் கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

எங்களுக்கு இன்னும் 10 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்த மோசமான நிலைமையை மாற்றி வெற்றி பெறத் தொடங்கி விட்டால், அதே பாதையில் தொடர முடியும். ஒரு அணியாக நாங்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவரை நாங்கள் ஆடிய 4 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் நன்றாக விளையாடினோம். அதில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். ஒரு அணியாக தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம்.

இவ்வாறு கோலி கூறினார்.

நெஹரா கருத்து

பெங்களூரு அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹரா கூறும் போது, ‘ஒரு ஆட்டத்தில் குறிப்பிட்ட கட்டத்தில் நமது கை ஓங்கி விட்டால் வெற்றியும் கிடைத்து விடும். அது தான் எங்களுடைய ஒரே பிரச்சினையாக இருக்கிறது. இரு ஆட்டங்களில் நாங்கள் நெருங்கி வந்து தோல்வியை தழுவினோம். அந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தால் 2 வெற்றி, 2 தோல்வி என்று புள்ளி பட்டியலில் இருந்திருப்போம். அவ்வாறு நடந்திருந்தால் புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கும் அணிகளுக்கும், பின்தங்கி இருக்கும் அணிகளுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இருந்திருக்காது. இந்த தொடரை பொறுத்தவரை அடுத்த சுற்றுக்கு முன்னேற குறைந்தது 6 வெற்றிகளாவது அவசியமாகும்’ என்றார்.

Next Story