கிரிக்கெட்

பெங்களூரு அணி எழுச்சி பெறுமா? + "||" + Bengaluru IPL team Will rise

பெங்களூரு அணி எழுச்சி பெறுமா?

பெங்களூரு அணி எழுச்சி பெறுமா?
பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது.
இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் அந்த அணிக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. அணியில் நேர்த்தியான கூட்டு முயற்சி இல்லை. சென்னைக்கு எதிராக வெறும் 70 ரன்னில் சுருண்டதும், ஐதராபாத் அணிக்கு எதிராக 231 ரன்களை விட்டுக்கொடுத்ததும் அந்த அணியின் சீரற்ற தன்மைக்கு உதாரணம். இன்னும் சரியான கலவையில் அணி அமையவில்லை என்பதை ஒப்புக்கொண்ட விராட் கோலி, இனி வரும் ஆட்டங்களுக்கு கவனமுடன் ஆலோசித்து வீரர்களை களம் இறக்குவோம் என்று கூறியிருக்கிறார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி புயல் ஹெட்மயர் மீது கோலி நிறைய நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அவர் 4 ஆட்டங்களிலும் ஒன்றில் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதே போல் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் (8 விக்கெட்) கட்டுக்கோப்புடன் பந்து வீசிய போதிலும், அவருக்கு மற்ற பவுலர்களின் ஒத்துழைப்பு போதிய அளவில் கிடைக்கவில்லை. இதனால் அந்த அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும்.


கொல்கத்தா அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும் (ஐதராபாத், பஞ்சாப்புக்கு எதிராக) ஒன்றில் தோல்வியும் (டெல்லிக்கு எதிராக) கண்டுள்ளது. அந்த அணிக்கு பேட்டிங்கில் ஆணிவேராக ஆந்த்ரே ரஸ்செல் இருக்கிறார். கடைசி கட்டத்தில் ராட்சச பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய ரஸ்செல் 3 ஆட்டங்களில் 15 சிக்சர் உள்பட 158 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா, உத்தப்பா ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். இதே போல் சுனில் நரின், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா சுழலில் மிரட்டக்கூடியவர்கள். இதனால் அந்த அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. சொந்த ஊரில் பெங்களூரு அணி சரிவில் இருந்து எழுச்சி பெறுமா? அல்லது மறுபடியும் முடங்கி போகுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)