ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
x
தினத்தந்தி 16 April 2019 9:15 PM GMT (Updated: 16 April 2019 8:29 PM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி அதில் 7 வெற்றி, ஒரு தோல்வி என்று மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

ஐதராபாத் சன்ரைசர்ஸ்– சென்னை சூப்பர் கிங்ஸ்

 

இடம்: ஐதராபாத், நேரம்: இரவு 8 மணி

வில்லியம்சன் கேப்டன் டோனி

நட்சத்திர வீரர்கள்

 

வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர், ரஷித்கான், புவனேஷ்வர்குமார்

ரெய்னா, பிளிஸ்சிஸ், இம்ரான் தாஹிர், அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர்

இதுவரை நேருக்கு நேர் 10

2 வெற்றி 8 வெற்றி

அடுத்த சுற்றை உறுதி செய்யும் ஆர்வத்தில் சென்னை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி அதில் 7 வெற்றி, ஒரு தோல்வி என்று மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அனுபவம் வாய்ந்த சென்னை அணி, டோனியின் கேப்டன்ஷிப்பில் வியப்புக்குரிய வகையில் விளையாடி வருகிறது. கடந்த இரு ஆட்டங்களில் அதாவது ராஜஸ்தான் (24–4) மற்றும் கொல்கத்தாவுக்கு (81–4) எதிராக முதல் 4 விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்தாலும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியை தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்தனர். இதே போல் பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பக்கபலமாக இருக்கிறார். அவர் சராசரியாக ஓவருக்கு 5.76 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியிருப்பதுடன், மொத்தம் 13 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். சென்னை அணியை பொறுத்தவரை பீல்டிங் மட்டும் சற்று மந்தமாக காணப்படுகிறது. ஆனாலும் பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக இருப்பதால், அது ஒரு பிரச்சினையாக எழவில்லை. உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் உள்ள அம்பத்தி ராயுடு அந்த சோகத்தை மறந்து இந்த ஆட்டத்தில் எப்படி கவனம் செலுத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தத்தில் வெற்றிப்பயணத்தை நீட்டித்து, அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே–ஆப்) முதல்அணியாக உறுதிசெய்யும் ஆர்வத்துடன் சென்னை வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

முதல் 4 ஆட்டங்களில் 3–ல் வெற்றி பெற்று அசத்திய ஐதராபாத் அணி, அதன் பிறகு மும்பை, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிராக வரிசையாக தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (7 ஆட்டத்தில் ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 400 ரன்), ஜானி பேர்ஸ்டோ (304 ரன்) ஆகியோரைத் தான் மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் வெளியேறினால், அதன் பிறகு தகிடுதத்தம் போட்டு விடுகிறது. டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்து தந்தது. இதனால் எளிதில் வெறி பெற்று விடும் என்றே தோன்றியது. ஆனால் அடுத்து வந்த வீரர்களில் யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. கடைசி 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை தாரை வார்த்து தோல்வி அடைந்தது. அவர்களின் மிடில் வரிசை பலவீனத்துக்கு இதுவே சான்று. இந்த குறைபாட்டை சரி செய்வதில் அந்த அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மனிஷ் பாண்டே, யூசுப் தான், விஜய் சங்கர் உள்ளிட்டோர் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிய இறுதிப்போட்டி உள்பட 4 ஆட்டங்களிலும் ஐதராபாத் அணி உதை வாங்கியது. இந்த சீசனிலும் சென்னை அணி பலம் வாய்ந்ததாக திகழ்வதால் ஐதராபாத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)


Next Story