உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணிக்கு கருணாரத்னே கேப்டன் அதிகாரபூர்வ அறிவிப்பு


உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணிக்கு கருணாரத்னே கேப்டன் அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 17 April 2019 10:00 PM GMT (Updated: 17 April 2019 9:21 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக திமுத் கருணாரத்னே நியமிக்கப்பட்டு இருப்பதாக இலங்கை தேர்வு குழு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

கொழும்பு, 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக திமுத் கருணாரத்னே நியமிக்கப்பட்டு இருப்பதாக இலங்கை தேர்வு குழு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. நியூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரின் போது கேப்டனாக பணியாற்றிய வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். மலிங்கா தலைமையில் இந்த ஆண்டில் ஆடிய 8 ஒரு நாள் போட்டிகளிலும் இலங்கை அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இருப்பினும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

30 வயதான கருணாரத்னே 2015–ம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. அதன் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளிலும், 17 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். அவரது தலைமையில் இலங்கை அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. இதனாலேயே அவருக்கு இப்போது உலக கோப்பை போட்டியை வழிநடத்தும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story