டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது: மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி


டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது: மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 8:35 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.

புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.

ரோகித் சர்மா சாதனை

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் அரங்கேறிய 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு அதிரடியாக ஆடிய இவர்கள் அணிக்கு திருப்திகரமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். ரோகித் சர்மா 14 ரன் எடுத்த போது, ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் (சர்வதேசம், ஐ.பி.எல்., உள்ளூர் உள்பட) 8 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.

மிஸ்ரா 150-வது விக்கெட்

‘பவர்-பிளே’ முடிந்ததும் விக்கெட்டை பறிகொடுத்த ரோகித் சர்மா (30 ரன், 22 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அணியின் ஸ்கோர் 57 ரன்களாக இருந்த போது வெளியேறினார். அவர், சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். இது மிஸ்ராவின் 150-வது விக்கெட்டாக (140 ஆட்டம்) பதிவானது. ஐ.பி.எல். வரலாற்றில் மலிங்காவுக்கு அடுத்து அந்த இந்த மைல்கல்லை எட்டியவர் மிஸ்ரா தான்.

2-வது விக்கெட்டுக்கு வந்த பென் கட்டிங் 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 35 ரன்களிலும் (ரன்-அவுட்), சூர்யகுமார் யாதவ் 26 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 11 முதல் 16 ஓவர்கள் இடைவெளியில் மும்பையின் ரன்வேகத்தை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் வெகுவாக குறைத்தார். இந்த சமயத்தில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சகோதரர்கள் அசத்தல்

ஆனால் இறுதி கட்டத்தில் சகோதரர்களான ஹர்திக் பாண்ட்யாவும், குருணல் பாண்ட்யாவும் சிக்சரும், பவுண்டரியுமாக ஓடவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களில் (15 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. குருணல் பாண்ட்யா 37 ரன்களுடன் (26 பந்து, 5 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் அந்த அணி 50 ரன்கள் சேகரித்தது. டெல்லி தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

டெல்லி தோல்வி

பின்னர் 169 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் (35 ரன், 22 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிரித்வி ஷா (20 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் தந்தும், பின்வரிசை வீரர்கள் திணறினர். தொடக்க வீரர்கள் இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் காலி செய்தார். அடுத்து வந்த காலின் முன்ரோ (3), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (7 ரன்), கிறிஸ் மோரிஸ் (11 ரன்) உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் ஆட்டம் மும்பை அணியின் பக்கம் திரும்பியது.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டெல்லி அணியால் 9 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

9-வது லீக்கில் ஆடிய மும்பை அணிக்கு இது 6-வது வெற்றியாகும். இதன் மூலம் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அத்துடன் ஏற்கனவே இந்த சீசனில் டெல்லியிடம் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்து விட்டது. டெல்லிக்கு இது 4-வது தோல்வியாகும்.

Next Story