பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 15 May 2019 10:50 PM GMT (Updated: 15 May 2019 10:50 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிரிஸ்டல்,

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று முன்தினம் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 151 ரன்னும், ஆசிப் அலி 52 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 41 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், டாம் குர்ரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து அணி வெற்றி

கடினமான இலக்குடன் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 17.3 ஓவர்களில் 159 ரன்னாக உயர்ந்த போது ஜாசன் ராய் (76 ரன்கள்) ஆட்டம் இழந்தார். 7-வது சதம் அடித்த பேர்ஸ்டோ 93 பந்துகளில் 15 பவுண்டரி, 5 சிக்சருடன் 128 ரன்கள் எடுத்த நிலையில் ஜூனைத்கான் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜோரூட் 43 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

44.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொயீன் அலி 46 ரன்னுடனும், கேப்டன் இயான் மோர்கன் 17 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணி வீரர் இமாம் உல்-ஹக்கின் சதம் வீணானது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஜூனைத்கான், இமாத் வாசிம், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அடுத்த ஆட்டம்

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நாளை நடக்கிறது.

மெதுவாக பந்து வீச்சு:

இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கனுக்கு ஒரு ஆட்டத்தில் ஆட தடை
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையே பிரிஸ்டலில் நேற்று முன்தினம் நடந்த 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பந்து வீச்சின் போது மெதுவாக செயல்பட்டதால் வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரத்தை எடுத்து கொண்டது. இந்த சம்பவம் குறித்து போட்டி நடுவர் ரிச்சர்ட்சன் விசாரணை நடத்தினார். ஏற்கனவே பிப்ரவரி 22-ந் தேதி நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி பந்து வீச்சில் கூடுதல் நேரத்தை எடுத்தது. 12 மாதங்களில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக இந்த குற்றத்தை இழைத்ததால் அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு ஒரேயொரு ஒருநாள் போட்டியில் விளையாட போட்டி நடுவர் தடை விதித்தார். அத்துடன் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அணியின் மற்ற வீரர்களுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டிங்காமில் நாளை நடை பெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் இயான் மோர்கன் விளையாட முடியாது.

அத்துடன் ஆட்டம் இழந்த விரக்தியில் ஸ்டம்பை தாக்கிய இங்கிலாந்து அணி வீரர் பேர்ஸ்டோவுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி தண்டனையாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story