அவரை தீவிரவாதி என்றுதான் அழைப்போம் - தோனி குறித்து அவரது நண்பர் தகவல்


அவரை தீவிரவாதி என்றுதான் அழைப்போம் - தோனி குறித்து அவரது நண்பர் தகவல்
x
தினத்தந்தி 18 May 2019 6:29 AM GMT (Updated: 18 May 2019 6:29 AM GMT)

அவரை தீவிரவாதி என்றுதான் அழைப்போம் - தோனி குறித்து அவரது பீகார் அணி நண்பரான சத்ய பிரகாஷ் தகவல் தெரிவித்து உள்ளார்.


ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்த கிரிக்கெட் திருவிழாவாக இங்கிலாந்தில் தொடங்க இருக்கிறது உலகக்கோப்பை.  உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 6-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

உலகக்கோப்பை அணியில் அனுபவ வீரரான தோனியின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும் எனப் பல முன்னாள் இன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தோனியின் பீகார் அணி நண்பரான சத்ய பிரகாஷ், தோனியுடன் இருந்த அனுபவங்களைப் பிரபல ஸ்போர்ட்ஸ் ஊடகமான ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிடம் பகிர்ந்துள்ளார். 

இந்த சத்ய பிரகாஷ் யாரென்று நினைவிருக்கிறதா... டோனியின் வாழ்க்கையை நம் கண்முன் காட்டிய எம்.எஸ் தோனி, `தி அண்டோல்டு ஸ்டோரி' படத்தில் தோனியின் நண்பராக சத்ய பிரகாஷ் என்கிற ஒருவர் வருவார் அவர்தான்.

தற்போது டோனி தொடர்பான சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்திருப்பவர்  உண்மையான  சத்ய பிரகாஷ். தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இன்னமும் அந்த நட்பு தொடர்வதாக சத்ய பிரகாஷ் முன்னரே கூறி உள்ளார்.

 ``நாங்கள் தோனியை தீவிரவாதி என அப்போது அழைப்போம். அவர் களத்துக்குச் சென்றால் 20 பந்துகளில் 40-50 ரன்கள் அடித்துவிட்டு வந்துவிடுவார். ஆனால், நாட்டுக்காக ஆடும்போது அவர் துறவியைப் போன்று ஆகிவிட்டார். அவர் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டார்.
 
அப்போதெல்லாம் தோனி பெரிதாக கேப்டன்ஷிப் செய்தது கிடையாது. ஆனால், இப்போது பாருங்கள்.. உலகின் சிறந்த வீரர்களுக்கு அவர் கேப்டனாக இருந்திருக்கிறார். அவர் தொடர்ந்து கற்றுக்கொள்ள விரும்புவார். நாங்கள் ஒன்றாக விளையாடிய காலத்தில் அவர் இந்தியில் மட்டுமே பேசுவார். ஆங்கிலத்தில் பேசமாட்டார். ஆனால், இப்போது பாருங்கள். சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார்" என பெருமையாக கூறினார்.

Next Story