உலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்


உலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்
x
தினத்தந்தி 26 May 2019 10:30 PM GMT (Updated: 27 May 2019 1:00 PM GMT)

உலக கோப்பையில் கடைசியாக ஆடும் நட்சத்திரங்கள்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சில முன்னணி வீரர்களுக்கு இதுவே கடைசி உலக கோப்பை தொடராக அமைய இருக்கிறது. தங்களது கனவை நிறைவேற்றும் முனைப்புடன் உள்ள அத்தகைய வீரர்கள் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

டோனி (இந்தியா): முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனிக்கு இது 4-வது மற்றும் கடைசி உலக கோப்பை தொடராகும். விக்கெட் கீப்பிங் பணியில் கேப்டனுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் ஆட்டத்தின் போக்குக்கு ஏற்ப சமயோசிதமாக ஆலோசனைகளை வழங்கி வெற்றியை மீட்டெடுப்பதில் டோனிக்கு நிகர் யாருமில்லை. இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ஒரு பக்கம் நெருக்கடி கொடுத்தாலும், தனது விக்கெட் கீப்பிங் அனுபவத்தின் மூலம் அணியில் இடத்தை தக்க வைத்திருக்கிறார். சமீபத்தில் ஐ.பி.எல். தொடரில் 3 அரைசதம் உள்பட 416 ரன்கள் எடுத்து பேட்டிங் திறனை வெளிக்காட்டிய டோனியை தான் இந்த உலக கோப்பையில் மிடில் வரிசையில் இந்திய அணி மலைபோல் நம்பி இருக்கிறது. பந்துகளை விரயமாக்காமல் அவர் விளையாடினால் அது அணிக்கு மிகப்பெரிய அனுகூலமாக இருக்கும். 37 வயதான டோனி 341 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 10,500 ரன்கள் சேர்த்து இருக்கிறார். விக்கெட் கீப்பிங்கில் 314 கேட்ச் மற்றும் 120 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்): தன்னை கண்டால் இன்னும் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு பயம் இருக்கிறது என்று மார்தட்டிக்கொள்ளும் பேட்டிங் ஜாம்பவான் 39 வயதான கிறிஸ் கெய்லுக்கு இது 5-வது உலக கோப்பை தொடராகும். இந்த உலக கோப்பையுடன் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடப்போவதாக அறிவித்து விட்டார். வயது அதிகமானாலும் கெய்லின் சிக்சர் தாகம் மட்டும் சற்றும் தணியவில்லை. ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 39 சிக்சர்கள் நொறுக்கிய கெய்ல், இந்த உலக கிரிக்கெட் திருவிழாவிலும் சிக்சர் மழை பொழிந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வேட்கையுடன் காத்திருக்கிறார். உலக கோப்பையில் அதிக சிக்சர் விளாசியவர்களின் பட்டியலில் டிவில்லியர்சுடன் சமனில் (தலா 37 சிக்சர்) இருக்கும் கெய்ல் அதை இந்த முறை முறியடித்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. அவர் இதுவரை 289 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 25 சதங்கள், 314 சிக்சருடன் 10,151 ரன்கள் குவித்து இருக்கிறார்.

ராஸ் டெய்லர் (நியூசிலாந்து): நியூசிலாந்து அணியில் பேட்டிங்கின் முதுகெலும்பாக திகழும் 35 வயதான ராஸ் டெய்லருக்கு இது 4-வது உலக கோப்பை போட்டியாகும். 218 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 20 சதம் உள்பட 8,026 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்த ஆண்டில் 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதமும், 4 அரைசதமும் அடித்துள்ளார். நியூசிலாந்தின் உலக கோப்பை ஆசை சாத்தியமாக வேண்டும் என்றால், மிடில் வரிசையில் ராஸ் டெய்லரின் பங்களிப்பு சீராக இருக்க வேண்டியது முக்கியம்.

இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா): இந்த உலக கோப்பையில் அதிக வயதில் அடியெடுத்து வைக்கும் வீரரான இம்ரான் தாஹிர், உலக கோப்பை முடிந்ததும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக சில மாதங்களுக்கு முன்பே கூறிவிட்டார். 40 வயதான இம்ரான் தாஹிர் சுழல் ஜாலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுவதுடன், ரன்வேகத்தை கட்டுப்படுத்துவதிலும் வல்லவர். தனது 3-வது உலக கோப்பையில் ஆட உள்ள இம்ரான் தாஹிர், தென்ஆப்பிரிக்காவின் நீண்ட நாள் ஏக்கத்தை தணிக்கும் முயற்சியில் முடிந்த அளவுக்கு தனது பங்களிப்பை அளிக்க தீவிரம் காட்டுகிறார். 98 ஒரு நாள் போட்டிகளில் 162 விக்கெட்கள் கைப்பற்றி இருக்கிறார். இம்ரான் தாஹிரை போன்று ஸ்டெயின் (வயது 35), அம்லா (36), டுமினி (35) ஆகிய தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கும் இதுவே கடைசி உலக கோப்பை தரிசனமாகும்.

லசித் மலிங்கா (இலங்கை): ‘யார்க்கர் மன்னன்’ என்று அழைக்கப்படும் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா களம் காணும் 4-வது உலக கோப்பை தொடர் இதுவாகும். ஓராண்டு ஒதுக்கி வைக்கப்பட்டு மறுபடியும் அணிக்கு திரும்பிய மலிங்கா சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி மகுடம் சூடுவதற்கு பக்கபலமாக இருந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 பந்தில் தொடர்ச்சியாக 4 விக்கெட் வீழ்த்திய ஒரே பவுலரான மலிங்கா, இந்த உலக கோப்பையில் மீண்டும் ஒரு முறை கலக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 35 வயதான மலிங்கா 218 ஒரு நாள் போட்டிகளில் 322 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்): முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான சோயிப் மாலிக் இந்த உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே கூறியிருக்கிறார். 37 வயதான மாலிக் 284 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 7,526 ரன்களும், 157 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மற்றொரு ஆல்-ரவுண்டர் முகமது ஹபீசின் வயது 38. இவர் 210 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 6,361 ரன்களும், 137 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் மிகவும் அனுபவசாலிகளான இவர்கள், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.

Next Story