தென்ஆப்பிரிக்க அணி முதல் வெற்றி பெறுமா? வங்காளதேசத்துடன் இன்று மோதல்


தென்ஆப்பிரிக்க அணி முதல் வெற்றி பெறுமா? வங்காளதேசத்துடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 1 Jun 2019 10:30 PM GMT (Updated: 1 Jun 2019 8:32 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா–வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா–வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

தென்ஆப்பிரிக்கா–வங்காளதேசம் மோதல்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4–வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 5–வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா–வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

பாப் டுபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே தென்ஆப்பிரிக்க அணி விக்கெட்டை கைப்பற்றினாலும், அந்த உத்வேகத்தை தொடர முடியவில்லை. பேட்டிங்கில் குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் ஆகியோர் மட்டுமே அரை சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டில் தாக்கியதில் உடனடியாக வெளியேறி விட்டு பின்னர் களம் திரும்பிய தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா 13 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். நிகிடி, ரபடா, இம்ரான் தாஹிர் ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் காயம் காரணமாக ஸ்டெயின் ஆட முடியாமல் போனது தென்ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஸ்டெயின் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது தெரியவில்லை. தென்ஆப்பிரிக்க அணி வெற்றியை ருசிக்க வேண்டும் என்றால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியமானதாகும்.

வங்காளதேச அணி தனது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது, அந்த ஆட்டத்தில் வங்காளதேச அணியினர், இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தினாலும் மிடில் வரிசை விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினார்கள். மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணியில் நம்பர் ஒன் ஆல்–ரவுண்டரான ‌ஷகிப் அல்–ஹசன், மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். பயிற்சியின் போது மணிக்கட்டில் காயம் அடைந்த தமிம் இக்பால் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

மழை பெய்ய வாய்ப்பு

வங்காளதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணி வலுவான அணிகளுக்கும் சில சமயங்களில் அதிர்ச்சி அளிக்கும். 2007–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டத்தில் வங்காளதேச அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் இன்று பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குளிர்ந்த காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும். எனவே இந்த ஆட்டத்தின் முடிவில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஹசிம் அம்லா, மார்க்ராம், பாப் டுபிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், பால் டுமினி, பிரிட்டோரியஸ், பெலக்வாயோ, ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

வங்காளதேசம்: லிட்டான் தாஸ், தமிம் இக்பால், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், ‌ஷகிப் அல்–ஹசன், முகமது மிதுன், மக்முதுல்லா, மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான், முகமது சைபுதீன்.

தென்ஆப்பிரிக்கா–வங்காளதேசம்

 

3 தரவரிசை 7

இதுவரை நேருக்கு நேர் 20

17 வெற்றி, 3 வெற்றி

உலக கோப்பையில் நேருக்கு நேர் 3

2 வெற்றி, 1 வெற்றி

 


Next Story