கிரிக்கெட்

முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது நல்ல அறிகுறியாகும் வங்காளதேச கேப்டன் மோர்தசா கருத்து + "||" + The first game was a success Good sign Bangladesh captain Mortaza Comment

முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது நல்ல அறிகுறியாகும் வங்காளதேச கேப்டன் மோர்தசா கருத்து

முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது நல்ல அறிகுறியாகும் வங்காளதேச கேப்டன் மோர்தசா கருத்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது நல்ல அறிகுறியாகும் என்று வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா தெரிவித்தார்.
லண்டன்,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. தென்ஆப்பிரிக்க அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். அந்த அணி தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்து இருந்தது.


முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்னும், ஷகிப் அல்-ஹசன் 75 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது. கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் (62 ரன்கள்) அரைசதம் அடித்தார். வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டும், முகமது சைபுதீன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். வங்காளதேச அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

உலக கோப்பை போட்டியில் மோர்தசா தலைமையில் வங்காளதேச அணி 6 ஆட்டங்களில் ஆடி 4-வது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் வங்காளதேச அணிக்கு அதிக வெற்றி தேடிக்கொடுத்த கேப்டன் என்ற பெருமையை மோர்தசா பெற்றுள்ளார். இதற்கு முன்பு உலக கோப்பையில் ஷகிப் அல்-ஹசன், ஹபிபுல் பஷர் தலைமையில் வங்காளதேச அணி தலா 3 வெற்றியை பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

வெற்றிக்கு பிறகு வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா அளித்த பேட்டியில், ‘முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது எப்பொழுதும் நல்ல அறிகுறியாகும். அதேநேரத்தில் இந்த வெற்றியால் நாம் அதிகம் உற்சாகம் அடைந்து விடக்கூடாது. வீரர்கள் அமைதியாக செயல்பட வேண்டியது முக்கியமானது. இன்னும் 8 ஆட்டங்களில் விளையாட வேண்டியது இருக்கிறது. சமீபத்தில் அயர்லாந்தில் நடந்த 3 நாடுகள் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இந்த போட்டிக்கு வந்தோம். அந்த உத்வேகம் இந்த வெற்றிக்கு எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். சவும்யா சர்கார் நல்ல தொடக்கம் கொடுத்தார். முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன் ஆகியோரும் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டனர். ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருந்தது. இதனை அறிந்து இருந்த நாங்கள் துல்லியமாக பந்து வீசி எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். பந்து வீச்சாளர்களை மாற்றி, மாற்றி பந்து வீச வைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. ரசிகர்கள் எங்களுக்கு நல்ல ஆதரவு அளித்தனர். வரும் ஆட்டங்களிலும் ரசிகர்களின் ஆதரவு தொடரும் என்று நம்புகிறோம். அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோத இருக்கிறோம். அந்த அணிக்கு எதிராக நல்ல திட்டங்களுடன் களம் காண்போம். இந்த வெற்றி எங்களது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது’ என்று தெரிவித்தார்.