கிரிக்கெட்

இலங்கை அணி வெற்றி கணக்கை தொடங்குமா? ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல் + "||" + Sri Lanka team Confrontation with Afghanistan today

இலங்கை அணி வெற்றி கணக்கை தொடங்குமா? ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்

இலங்கை அணி வெற்றி கணக்கை தொடங்குமா? ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கார்டிப்,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 6-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) கார்டிப்பில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.


கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி இந்த உலக கோப்பை போட்டியில் மோசமான தொடக்கம் கண்டது. நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கேப்டன் கருணாரத்னே 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. 29.2 ஓவர்களில் 136 ரன்னில் இலங்கை சுருண்டது.

மலிங்கா உள்பட பந்து வீச்சாளர்கள் ஒருவர் கூட விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. 16.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி எளிதில் இலக்கை எட்டிப்பிடித்தது. ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வரும் இலங்கை அணி பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் எழுச்சி பெற வேண்டியது அவசியமானதாகும்.

குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தாலும் மிடில் வரிசை வீரர்களின் பங்களிப்பால் ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. நஜிபுல்லா ஜட்ரன் அரைசதம் அடித்தார். 35 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றி இலக்கை எட்டியது. ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், குல்படின் நைப், முஜீப் ரகுமான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

ஆப்கானிஸ்தான் அணி அதிக அனுபவம் இல்லாதது என்றாலும் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் திறன் கொண்டதாகும். ஆரம்ப ஆட்டத்தில் அடைந்த சரிவில் இருந்து மீண்டு வர ஆப்கானிஸ்தான் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி அந்த தோல்வியை மறந்து வெற்றி கணக்கை தொடங்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

போட்டி நடைபெறும் கார்டிப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் இலங்கை அணி இதுவரை 5 ஒரு நாள் போட்டியில் ஆடி அனைத்திலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த மைதானத்தில் ஆடிய அனுபவம் கிடையாது. கார்டிப்பில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழை காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இலங்கை: திரிமன்னே, கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டிசில்வா, மேத்யூஸ், ஜீவன் மென்டிஸ், திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்கா.

ஆப்கானிஸ்தான்: முகமது ஷாசத், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி, முகமது நபி, குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், ரஷித் கான், தவ்லத் ஜட்ரன், முஜீப் ரகுமான், ஹமித் ஹசன்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.