பொறுப்புணர்வுடன் செயல்படாதது தோல்விக்கு காரணம் - தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபிளிஸ்சிஸ் வேதனை


பொறுப்புணர்வுடன் செயல்படாதது தோல்விக்கு காரணம் - தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபிளிஸ்சிஸ் வேதனை
x
தினத்தந்தி 24 Jun 2019 11:40 PM GMT (Updated: 24 Jun 2019 11:40 PM GMT)

நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படாதது தோல்விக்கு காரணம் என்று தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் வேதனை தெரிவித்தார்.

லண்டன்,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் லண்டனில் நேற்று முன்தினம் நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. 5-வது தோல்வியை சந்தித்த தென்ஆப்பிரிக்க அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களே எடுத்து தோல்வி கண்டது. 89 ரன்கள் சேர்த்த பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சோகைல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் கூறியதாவது:-

நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வழக்கமாக எங்கள் பந்து வீச்சு நன்றாக இருக்கும். ஆனால் இந்த ஆட்டத்தில் பந்து வீச்சும் சரியாக அமையாததால் எதிரணியை 300 ரன்களுக்கு மேல் எடுக்க விட்டுவிட்டோம். பாகிஸ்தான் அணி கூடுதலாக 20 ரன்கள் எடுத்தது. நாங்கள் பேட்டிங்கில் நல்ல தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாகும். எல்லா நேரங்களிலும் நாங்கள் வேகமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். பார்ட்னர்ஷிப் ஆட்டம் வலுப்பெற தொடங்கும் போது விக்கெட்டுகளை இழந்தோம். இது தான் எங்களுக்கு பிரச்சினையாக அமைந்தது. எங்களது பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இதனால் நாங்கள் 30 முதல் 40 ரன்கள் குறைவாக எடுத்தோம்.

நாங்கள் கடுமையாக பயிற்சி எடுத்தோம். தீவிரமாக உழைத்தோம். ஆனால் விளையாட்டை பொறுத்தமட்டில் தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானதாகும். தற்போது எங்கள் அணியினர் நம்பிக்கையை இழந்து உள்ளனர். பாகிஸ்தான் போன்ற வலுவான அணியுடன் மோதுகையில் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் நமக்கு நிச்சயம் நெருக்கடி ஏற்படும். இம்ரான் தாஹிர் நன்றாக பந்து வீசினார். அவருக்கு மற்ற பவுலர்கள் உறுதுணையாக நிற்கவில்லை. இந்த உலக கோப்பை தோல்வி எங்களுக்கு பெரிய பின்னடைவாகும். ஒரு அணியாக நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை. எங்கள் அணியில் போதிய திறமை இருந்தும் அதனை சரியாக வெளிப்படுத்தாததால் தலைகுனிவை சந்தித்து இருக்கிறோம். உலக கோப்பை போட்டிக்கு முன்பு நாங்கள் சில முக்கிய வீரர்களுக்கு போதிய அளவுக்கு ஓய்வு அளித்து இருக்க வேண்டும். ரபடாவை ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று தடுக்க முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ரபடா ஐ.பி.எல். போட்டியில் விளையாடியதால் இந்த போட்டியில் புத்துணர்வுடன் செயல்பட முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story