சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து கோலி அசத்தல் தெண்டுல்கர், லாரா சாதனை முறியடிப்பு


சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை  வேகமாக கடந்து கோலி அசத்தல் தெண்டுல்கர், லாரா சாதனை முறியடிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 10:26 PM GMT (Updated: 27 Jun 2019 10:26 PM GMT)

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து கோலி அசத்தல் தெண்டுல்கர், லாரா சாதனைகளை முறியடித்துள்ளார்.

உ லக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 37 ரன்கள் எடுத்த போது, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) 20 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக கடந்த வீரர் (417-வது இன்னிங்ஸ்) என்ற புதிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு ஜாம்பவான்கள் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா ஆகியோர் தங்களது 453-வது இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே அதிவேகமாக இருந்தது. அவர்களின் சாதனையை 30 வயதான கோலி முறியடித்தார். அதே சமயம் மொத்தத்தில் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில் கோலி 12-வது வீரராகவும், இந்திய அளவில் 3-வது வீரராகவும் இணைந்தார். விராட் கோலி ஒரு நாள் போட்டியில் 11,159 ரன் (224 இன்னிங்ஸ்), டெஸ்டில் 6,613 ரன் (131 இன்னிங்ஸ்), 20 ஓவர் போட்டியில் 2,263 ரன் (62 இன்னிங்ஸ்) என்று மொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில் 66 சதங்கள் உள்பட 20,035 ரன்கள் குவித்து இருக்கிறார்.

சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்த சாதனையாளர்களில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 100 சதங்கள் உள்பட 34,357 ரன்களுடன் (782 இன்னிங்ஸ்) முதலிடத்திலும், இலங்கையின் சங்கக்கரா 28,016 ரன்களுடன் (666 இன்னிங்ஸ்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 27,483 ரன்களுடன் (668 இன்னிங்ஸ்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

தெண்டுல்கர், கோலியை தவிர்த்து இந்த இந்த இலக்கை எட்டிய மற்றொரு இந்தியர் ராகுல் டிராவிட் (24,208 ரன், 605 இன்னிங்ஸ்) ஆவார்.

Next Story