கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறதுஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் வேதனை + "||" + It is disappointing that the South African team failed Australian captain Aaron Finch is tormented

தென்ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறதுஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் வேதனை

தென்ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறதுஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் வேதனை
தென்ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது என ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கருத்து தெரிவித்தார்.
மான்செஸ்டர், 

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மான்செஸ்டரில் நேற்று முன்தினம் பகல்-இரவாக நடந்த 45-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, அரைஇறுதி வாய்ப்பை இழந்த தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 100 ரன்னும், வான்டெர் துஸ்சென் 95 ரன்னும், குயின்டான் டி காக் 52 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 315 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் அடித்த தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஒருநாள் போட்டியில் 17-வது சதம் அடித்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 117 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது சதம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டதன் மூலம் ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி 3-வது இடமும், நியூசிலாந்து அணி 4-வது இடமும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த இந்த அணிகள் அரைஇறுதியில் மோதும். எஞ்சிய 6 அணிகள் லீக் சுற்றுடன் போட்டியில் இருந்து வெளியேறின.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஆட்டத்தில் வெற்றி பெற விரும்பினோம். தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் இந்த போட்டியில் இருந்து சில நம்பிக்கைகளை பெற்றுள்ளோம். எங்களது விக்கெட்டுகள் வேகமாக சரிந்தாலும் டேவிட் வார்னர் அருமையாக ஆடி சதம் அடித்தார். அலெக்ஸ் கேரி சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். எங்களது பந்து வீச்சு நேர்த்தியாக அமையவில்லை. நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த போட்டியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் காயம் குறித்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தான் முடிவு செய்யப்படும். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் மிகப்பெரியதாக இருக்கும். இது சிறந்த ஆட்டமாக அமையும் என்று நம்புகிறேன். அதிக ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்றார்.