சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக இந்த ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் விஜய்சங்கர் நம்பிக்கை


சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக இந்த ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் விஜய்சங்கர் நம்பிக்கை
x
தினத்தந்தி 13 July 2019 10:30 PM GMT (Updated: 13 July 2019 8:58 PM GMT)

இந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என்று ஆல்-ரவுண்டர் விஜய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என்று ஆல்-ரவுண்டர் விஜய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எல்.

8 அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. திண்டுக்கல் நத்தத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் தலா 15 ஆட்டங்கள் நெல்லை, நத்தம் ஆகிய இடங்களிலும், 2 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்திலும் நடைபெறும். ஒரு ஆட்டம் இருக்கும் நாட்களில் போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கும். இரண்டு ஆட்டம் இருக்கும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.15 மணிக்கும், 2-வது போட்டி இரவு 7.15 மணிக்கும் தொடங்கும். இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆகஸ்டு 15-ந் தேதி நடக்கிறது.

விஜய்சங்கர் நம்பிக்கை

இதையொட்டி சென்னையில் நேற்று டி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் நட்சத்திர வீரருமான விஜய் சங்கர் கூறுகையில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட் இளம் வீரர்களுக்கு நல்ல அடித்தளமாகும். இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், வருண் சக்கரவர்த்தி போன்றவர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வாகி விளையாடி இருக்கிறார்கள். அதுபோல் அவர்கள் தமிழக அணிக்காக ரஞ்சி போட்டியிலும் பங்கேற்று இருக்கிறார்கள். மேலும் பலர் டி.என்.பி.எல். போட்டியில் நன்றாக விளையாடி ஐ.பி.எல். போட்டிக்குள் நுழைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

டி.என்.பி.எல். தொடரில் இதுவரை நான் விளையாடவில்லை. இந்த ஆண்டு டி.என்.பி.எல். போட்டியில் நான் அறிமுகம் ஆவேன் என்று நம்புகிறேன். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு நாளை (இன்று) செல்ல உள்ளேன். அங்கு சென்ற பிறகு தான் எனது உடல்தகுதி குறித்து தெரிய வரும்’ என்றார். உலக கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த விஜய்சங்கர் காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலகியது குறிப்பிடத்தக்கது.

பா.சிவந்தி ஆதித்தன்

நிகழ்ச்சியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் பேசுகையில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட் இளம் வீரர்களுக்கு வரப்பிரசாதமாகும். இந்த ஆண்டு புதிதாக சில வீரர்களை எடுத்துள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்றார். பின்னர் பா.சிவந்தி ஆதித்தன் நிருபர்களிடம் கூறுகையில், ‘டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு தேர்வாகியுள்ள ஜெபசெல்வின், ஆனந்த், சந்தானசேகர் ஆகியோர் கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் தான். எங்கிருந்து வருகிறார்கள் என்பது பிரச்சினை இல்லை. கிரிக்கெட் நன்றாக ஆடினால் வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

கோவைக்கும்...

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் பி.ரமேஷ் பேசுகையில் ‘ஆண்டுக்கு ஆண்டு டி.என்.பி.எல். போட்டி வளர்ச்சி அடைந்து வருகிறது. போட்டிக்கு ஸ்பான்சர்ஷிப்பும் கிடைத்து வருகிறது. தரமான வீரர்களை உருவாக்குவதே டி.என்.பி.எல். போட்டியின் நோக்கம். அடுத்த ஆண்டு இந்த போட்டியை கோவை உள்பட சில இடங்களுக்கு விரிவுப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்’ என்றார். டி.என்.பி.எல். சேர்மன் ராமன் கூறுகையில், ‘கடந்த சீசனை போல் இந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்’ என்றார்.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஜே. குழும தலைவர் என்.ஜெயமுருகன், டி.என்.பி.எல். நிர்வாக கவுன்சில் உறுப்பினர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story