மீண்டும் அதுபோல நடக்காது என்று நம்புகிறோம்: ஓவர் த்ரோ குறித்து வில்லியம்சன் கருத்து


மீண்டும் அதுபோல நடக்காது என்று நம்புகிறோம்: ஓவர் த்ரோ குறித்து வில்லியம்சன் கருத்து
x
தினத்தந்தி 15 July 2019 7:04 AM GMT (Updated: 15 July 2019 7:04 AM GMT)

கோப்பையை வெல்ல தகுதியான அணி இங்கிலாந்து என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்தார்.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.  இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வென்று சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது.  முன்னதாக ஆட்டத்தின் போது 3 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் என்ற இக்கட்டான நிலை இங்கிலாந்து அணிக்கு இருந்தது.   4-வது பந்தில் 2 ரன்களே ஓடி எடுக்கப்பட்ட நிலையில், ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி சென்று இங்கிலாந்து அணிக்கு ஆறு ரன்கள் கிடைத்தது. ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக இந்த ஓவர் த்ரோ அமைந்தது.  

இந்த நிலையில், போட்டிக்கு பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:- ‘போட்டி கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள். உலகக்கோப்பையை வெல்ல அந்த அணி தகுதியானது. இந்த பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருந்தது. இதில் 300 ரன்களுக்கு மேல் அடிக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இன்னும் 10-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். எங்கள் வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். கடைசி வரை போராடினார்கள். அவர்களுக்கு நன்றி. கடைசிக் கட்டத்தில் ஸ்டம்பை நோக்கி எறியப்பட்ட பந்து, பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது அவமானகரமானது. விளையாட்டில் இதுவும் ஓர் அங்கம் என்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காது என நம்புகிறோம்” என்றார். 

Next Story