கிரிக்கெட்

நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது: உலக கோப்பையை வெல்ல அதிர்ஷ்டமும் காரணம் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார் + "||" + Win the World Cup And luck is the cause Says England captain Morgan

நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது: உலக கோப்பையை வெல்ல அதிர்ஷ்டமும் காரணம் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்

நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது: உலக கோப்பையை வெல்ல அதிர்ஷ்டமும் காரணம் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்
இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் உலக கோப்பையை வெல்ல அதிர்ஷ்டமும் காரணம்’ என்று இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.
லண்டன்,

இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் அரங்கேறிய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனதால் போட்டி டையில் முடிந்தது.


கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசினார். முதல் 2 பந்துகளில் ரன் எடுக்காத பென் ஸ்டோக்ஸ் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் 2 ரன் ஓடி எடுத்தபோது அவரை ரன்-அவுட் செய்ய நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் ஸ்டம்பை நோக்கி எறிந்தார். எதிர்பாராதவிதமாக பந்து பென்ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு ஓவர் துரோவாக பவுண்டரிக்கு சென்றது. இதனால் 4-வது பந்தில் 6 ரன் வந்தது. இது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் 2-வது ரன்னுக்கு ஓடிய போது எதிர்முனையில் நின்ற அடில் ரஷித் ரன்-அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்தது. இறுதி பந்தை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன் ஓடி விட்டு 2-வது ரன்னுக்கு திரும்பிய போது எதிர்முனையில் நின்ற மார்க்வுட் ரன்-அவுட் ஆனார். இதனால் திரில்லிங்கான இந்த ஆட்டம் டையில் (சமன்) முடிந்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 84 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் டையில் முடிந்தது இதுவே முதல்முறையாகும். இதனை அடுத்து உலக சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ்-ஜோஸ் பட்லர் இணை 15 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் பந்து வீசினார். பின்னர் 16 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீசினார். நியூசிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம், மார்ட்டின் கப்தில் ஜோடி பேட்டிங் செய்தது. முதல் 5 பந்தில் 14 ரன் எடுத்த நியூசிலாந்துக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. ஆனால் இந்த பந்தில் நியூசிலாந்து அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் ரன்-அவுட் ஆனார். சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 15 ரன் எடுத்ததால் மீண்டும் டை ஆனது.

போட்டி 2-வது முறையாக டை ஆகும் பட்சத்தில் ஆட்டத்தில் (சூப்பர் ஓவர் உள்பட) அதிக பவுண்டரி (சிக்சர் உள்பட) அடித்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுவது விதிமுறையாகும். நியூசிலாந்தை விட கூடுதலாக 9 பவுண்டரிகள் அடித்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 17 பவுண்டரிகளும், இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகளும் அடித்து இருந்தன. இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்வது முதல்முறையாகும். நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு ஏமாற்றம் அடைந்தது. கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லாவிட்டாலும், ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணியை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டி வருகின்றனர். கோப்பையை வென்றதால் இங்கிலாந்தில் கொண்டாட்டம் களை கட்டி இருக்கிறது.

சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு கோப்பையுடன் ரூ.28 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற நியூசிலாந்து அணிக்கு ரூ.14 கோடி அளிக்கப்பட்டது. 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் (578 ரன்கள்) தொடர்நாயகன் விருதை கைப்பற்றினார்.

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை போட்டி தொடரில் எங்களை விட நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. அரைஇறுதியில் அவர்கள் வலுவான இந்திய அணியை வீழ்த்தி இருந்தனர். கோப்பை எங்கள் பக்கம் வந்தது எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இறுதிப்போட்டியில் எங்கள் பக்கம் அதிர்ஷ்டமும் இருந்தது. இந்த வெற்றியால் எனது வாழ்க்கை அதிகம் மாறாது என்று நம்புகிறேன். இறுதிப்போட்டியில் பல விஷயங்கள் நடந்து விட்டன. அதற்காக வில்லியம்சன் மற்றும் அவரது அணியினருக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த போட்டி கடும் சவாலானதாக இருந்தது. எல்லோரும் ரன் எடுக்க திணறினார்கள். தொடக்கத்தில் நாங்கள் வேகமாக விக்கெட்டை இழந்ததால் இலக்கை எட்டுவது சிரமமாக இருந்தது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் சிறப்பாக செயல்பட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர். சூப்பர் ஓவரிலும் அவர்கள் இருவரையும் தான் அனுப்பினேன். எல்லா பெருமையும் அவர்களையே சாரும். ஜோப்ரா ஆர்ச்சர் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். பல்வேறு கலாசாரத்தை கொண்டவர்களும், வெவ் வேறு நாடுகளில் வளர்ந்தவர்களும் எங்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். அது எங்களுக்கு உதவியாகவே இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில், ‘பவுண்டரியை கணக்கிட்டு வெற்றியை நிர்ணயம் செய்தது நியாயமா? என்று நீங்கள் கேட்பதற்கு நான் ஒருபோதும் பதில் அளிக்கமாட்டேன். இரு அணிகளும் கடுமையாக போராடிய இந்த போட்டியில் வெற்றி எங்களுக்கு கிடைக்காமல் போனதை ஜீரணிக்க கடுமையாக இருக்கிறது. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணி தகுதியானது தான். அந்த அணிக்கு வாழ்த்துகள். பிட்ச் உலர்வாக இருந்ததால் பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் கூடுதலாக 10 முதல் 20 ரன்கள் எடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல நெருக்கடி கொடுத்தனர். இரு அணிகளும் நன்றாக போராடின. கடைசி பந்து வரை போராடிய அருமையான போட்டி இதுவாகும். மார்ட்டின் கப்தில் எறிந்த பந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது அவமானகரமானதாகும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்று நம்புகிறேன். எங்கள் அணி வீரர்களின் போராட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்’ என்று கூறினார்.