முடிவுகளை மாற்றிய முடிவுகள்: உலக கோப்பை போட்டியும் - நடுவர்களின் சர்ச்சைகளும்


முடிவுகளை மாற்றிய முடிவுகள்: உலக கோப்பை போட்டியும் - நடுவர்களின் சர்ச்சைகளும்
x
தினத்தந்தி 16 July 2019 10:10 AM GMT (Updated: 16 July 2019 10:10 AM GMT)

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நடுவர்கள் எடுத்த சில முடிவுகளால் போட்டியின் முடிவுகளே மாறி போய் உள்ளன. இதனால் நடுவர்களின் மீது உள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தாலும், இறுதியில் நடுவர்களின் பல குளறுபடிகளால், கிரிக்கெட்டின் மீது இருக்கும் நம்பிக்கையே கேள்வி குறியாகியுள்ளது.

லீக் போட்டியில் மேற்கிந்திய தீவு-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தில் கெயில், ஸ்டார்க் பந்து வீச்சில் எல்.பி.டபில்யூ ஆனார். ஆனால் அதன் பின் டிவி ரீப்ளேயில் ஸ்டார்க் அதற்கு முன்பு வீசிய பந்து நோ பால் என்பது தெரிய வந்தது. இதனால் கெயிலும் அந்த பந்தில் அவுட்டாகியிருக்கமாட்டார். அதுவும் பிரி கிட்டாகியிருக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் அமீர் வீசிய பவுன்சர் பந்தை கோலி லெக் திசையில் அடித்து ஆட முற்பட்ட போது, பந்தானது கீப்பர் கையில் சென்றது. இதனால் அமீர் அவுட் கேட்க, நடுவரும் அவுட் கொடுத்தார். ஆனால் அது டிவி ரீப்ளேயில் அவரது பேட்டில் படவே இல்லை என்பது தெரிய வந்தது.

இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை தகர்த்த டோனியின் ரன் அவுட். அந்த ஓவரின் போது குறிப்பிட்ட பந்தை டோனி எதிர்கொண்ட போது, அவுட் சைடில் 6 பீல்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதை கவனித்திருந்தால், இந்தியாவின் இறுதிப்போட்டி கனவு பலித்திருக்கலாம். ஆனால் இதைப்பற்றி மற்ற ஊடகங்கள் தெளிவான விளக்கம் கொடுத்த போதும், நடுவர்கள் இதைப்பற்றி தற்போது வரை வாய் திறக்கவில்லை.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதிய அரையிறுதி ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட, ராய் அடித்து ஆட முற்பட்டார். பந்தானது அவர் அருகே சென்றதால், பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் அவுட் கேட்க, அப்போது நடுவரான தர்மசேனா வெகு நேரம் காத்திருந்து அவுட் கொடுத்தார். அது டிவி ரீப்ளேவில் பார்த்த போது, அவுட் இல்லை என்பது தெரிந்தது.

உலக மக்களே ஆவலுடன் எதிர்பார்த்து பார்த்துக் கொண்டிருந்த இறுதிப் போட்டியின் போது, நடுவரின் தவறான முடிவால் ஓவர் த்ரோ சர்ச்சையும் நடந்தது. அதாவது கடைசி ஓவரில் நியூசிலாந்து வீரர் கப்தில் வீசிய த்ரோவானது பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. விதிமுறை படி பந்து பேட்டில் பட்டு பவுண்டரி சென்றால் 4 ரன்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் நடுவர்கள் 6 ரன்கள் கொடுத்ததால், நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு தகர்வதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

Next Story