கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்ஜமாம் விலகல் + "||" + Selection Committee of Pakistan Cricket team leader position deviation from the injamam

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்ஜமாம் விலகல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்ஜமாம் விலகல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்ஜமாம் உல்-ஹக் நேற்று அறிவித்தார்.
கராச்சி,

இங்கிலாந்தில் நடந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி 5 வெற்றி (இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக), 3 தோல்வி (வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளிடம்), ஒரு ஆட்டம் முடிவில்லையுடன் (இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) 11 புள்ளிகளுடன் 5-வது இடம் பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.


இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டதால் அந்த அணி மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்தன. வீரர்கள் தேர்வு சரியாக இல்லை என்று தேர்வு குழுவினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்து வரும் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக்கின் பதவி காலம் வருகிற 31-ந் தேதி முடிவடைகிறது. அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்ஜமாம் உல்-ஹக் லாகூரில் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

3 ஆண்டுகளுக்கு மேலாக தேர்வு குழு தலைவராக இருந்து விட்டேன். எனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என கேட்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். வருகிற செப்டம்பர் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு (2020) நடக்கிறது. அடுத்த உலக கோப்பை போட்டி (50 ஓவர்) 2023-ம் ஆண்டில் நடைபெறுகிறது. எனவே புதிய திட்டமும், சிந்தனையும் கொண்ட புதிய தேர்வு குழு தலைவரை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று நான் நம்புகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் இஷான் மணி, நிர்வாக இயக்குனர் வாசிம் கான் ஆகியோரிடம் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து விலகும் எனது முடிவை தெரிவித்து விட்டேன்.

2017-ம் ஆண்டில் முன்னணி வீரர்களான மிஸ்பா உல்-ஹக், யூனிஸ்கான் ஓய்வு பெற்ற பிறகு அணியில் சேர்க்கப்பட்ட இளம் வீரர்கள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளனர். அணியின் வெற்றி விகிதத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனது பதவி காலத்தில் 15 முதல் 16 இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அணிக்கு பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியில் 3 வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் நிலையான ஆட்டத்தை அளிக்கக்கூடிய தரமான வீரர்கள் உள்ளனர்.

இளம் வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டு அணியில் தங்களை நிலை நிறுத்தி இருப்பதை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடைய செயல்பாடுகளை தொடர்ந்து கவனிப்பேன். இந்த இளம் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்கு புதிய பதவி ஏதும் வழங்க முன்வந்தால் அதனை ஏற்றுக்கொள்ள தயார். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு குழுவின் புதிய தலைவராக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மொசின் ஹசன்கான் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இன்ஜமாம் பதவி காலத்தில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை (2017) வென்றது குறிப்பிடத்தக்கது.

இன்ஜமாம் உல்-ஹக்கின் சகோதரி மகன் இமாம் உல்-ஹக்குக்கு அணியில் இடம் அளித்தது அந்த நேரத்தில் சர்ச்சையாக கிளம்பியது நினைவிருக்கலாம்.