‘உலக கோப்பை அனுபவத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன்’ - விஜய் சங்கர்


‘உலக கோப்பை அனுபவத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன்’ - விஜய் சங்கர்
x
தினத்தந்தி 18 July 2019 11:53 PM GMT (Updated: 18 July 2019 11:53 PM GMT)

உலக கோப்பை அனுபவத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன் என விஜய் சங்கர் தெரிவித்தார்.

சென்னை,

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் விஜய்சங்கர் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட சக வீரர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் விஜய்சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிகட்ட ஆட்டங்களில் ஆட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதை முடிந்தவரை நன்றாக பயன்படுத்தினேன். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் திடீரென பந்து வீச அழைக்கப்பட்டதும், முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதும் எதிர்பாராத ஒன்றாகும். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்.

உலக கோப்பை அணியில் இடம் பிடித்ததால், சீனியர் வீரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அந்த அனுபவங்களை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன். இது நிச்சயம் இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. கவுசிக்காந்தி, டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 3 ஆண்டுகள் விளையாடிய அனுபவம் கொண்டவர். அவருடைய வருகை அணிக்கு மேலும் பலம் சேர்க்கும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவார்கள்.

அஸ்வின் (திண்டுக்கல்), தினேஷ் கார்த்திக் (காரைக்குடி), முரளிவிஜய் (திருச்சி வாரியர்ஸ்) போன்ற சர்வதேச வீரர்கள் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவது மிகப்பெரிய விஷயமாகும். இவர்கள் ஆடுவது இந்த தொடருக்கு மட்டுமல்ல, இளம் வீரர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமையும். இவ்வாறு விஜய் சங்கர் என்றார்.


Next Story