கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி 3-வது வெற்றி + "||" + TNPL 20 Over cricket Dindigul Dragons won by 40 runs

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி 3-வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி 3-வது வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது.
நெல்லை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் நேற்று நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொண்டது.


‘டாஸ்’ ஜெயித்த திண்டுக்கல் கேப்டன் ஆர்.அஸ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் கொடுத்தனர். 4.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 41 ரன்னாக இருந்த போது ஹரி நிஷாந்த் (17 ரன்) தமிழ்குமரன் பந்து வீச்சில் சுப்பிரமணிய சிவாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த விவேக் (11 ரன்), சதுர்வேத் (3 ரன்) சீக்கிரம் நடையை கட்டினர். 9 ஓவர்களில் அந்த அணி 69 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நெருக்கடியான சூழலில் 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஆர்.அஸ்வின், ஜெகதீசனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். ராஜகோபால் வீசிய ஒரு ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்ட அஸ்வின், தமிழ்குமரன் பந்து வீச்சில் 2 சிக்சரும், அதிசயராஜ் டேவிட்சன் பந்து வீச்சில் ஒரு சிக்சரும் தூக்கி அமர்க்களப்படுத்தினார்.

மறுமுனையில் ஜெகதீசன் தனது 12-வது அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் டி.என்.பி.எல். தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அணியின் ஸ்கோர் 116 ரன்னாக உயர்ந்த போது ஜெகதீசன் (53 ரன், 41 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் கணேஷ்மூர்த்தியின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 27 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஆர்.அஸ்வின் (52 ரன்கள், 28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த பந்திலேயே தமிழ்குமரனின் பந்து வீச்சில் ராஜகோபாலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த எம்.முகமது 1 ரன்னிலும், ஆர்.ரோகித் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. சுமந்த் ஜெயின் 16 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். தூத்துக்குடி தரப்பில் தமிழ்குமரன், கணேஷ்மூர்த்தி, செந்தில்நாதன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திண்டுக்கல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 54 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து திண்டாடியது. இதன் பின்னர் 8-வது விக்கெட் ஜோடியான எஸ்.பி.நாதன் (38 ரன்), கணேஷ்மூர்த்தி (35 ரன்) ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்ததால் அணி மோசமான நிலையில் இருந்து தப்பித்து 100 ரன்களை தாண்டியது. 20 ஓவர்களில் தூத்துக்குடி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் திண்டுக்கல் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் ஆர்.ரோகித் 3 விக்கெட்டும், ஜே.கவுசிக், திரிலோக் நாக், ஆர்.அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். எதிரணியின் டாப் வரிசையை சீர்குலைத்த திண்டுக்கல் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.ரோகித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இன்னும் தோல்வியே சந்திக்காத திண்டுக்கல் அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். அதே சமயம் 3-வது ஆட்டத்தில் ஆடிய தூத்துக்குடிக்கு இது 2-வது தோல்வியாகும்.