அதிக சர்வதேச போட்டியில் விளையாடினால் தான் சிறந்த தேர்வாளராக இருக்க முடியுமா? தேர்வு குழு தலைவர் பிரசாத் பதில்


அதிக சர்வதேச போட்டியில் விளையாடினால் தான் சிறந்த தேர்வாளராக இருக்க முடியுமா? தேர்வு குழு தலைவர் பிரசாத் பதில்
x
தினத்தந்தி 30 July 2019 10:00 PM GMT (Updated: 30 July 2019 8:20 PM GMT)

அதிக சர்வதேச போட்டியில் ஆடினால் தான் சிறந்த தேர்வாளராக இருக்க முடியுமா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி, 

அதிக சர்வதேச போட்டியில் ஆடினால் தான் சிறந்த தேர்வாளராக இருக்க முடியுமா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பதில் அளித்துள்ளார்.

தேர்வு குழு தலைவர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவை கடுமையாக சாடி இருந்தார். தற்போதைய தேர்வு குழுவினர் நொண்டி வாத்து போல் செயல்பட்டு வருகிறார்கள். உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரைஇறுதியுடன் வெளியேறிய நிலையில் அவர்கள் விராட்கோலியை எப்படி மீண்டும் கேப்டனாக தேர்வு செய்தார்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அதிக சர்வதேச போட்டியில் ஆடினால் தான் கிரிக்கெட் குறித்து அதிகம் அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இந்திய அணிக்காக வெவ்வேறு வடிவிலான போட்டியில் ஆடிய தகுதியின் அடிப்படையில் நாங்கள் தேர்வாளராக நியமிக்கப்பட்டோம். சர்வதேச போட்டிகள் தவிர்த்து நாங்கள் 477 முதல்தர போட்டியில் விளையாடி உள்ளோம். எங்களுடைய பதவி காலத்தில் 200–க்கும் மேற்பட்ட முதல்தர போட்டிகளை நேரில் பார்த்து இருக்கிறோம். வீரராக அனுபவமும், தேர்வாளராக இத்தனை போட்டிகளை பார்த்த பிறகும் திறமையான வீரர்களை தேர்வு செய்தவற்கு எங்களுக்கு தகுதி போதாதது என்று நினைக்கிறீர்களா?

மற்ற நாடுகளை பாருங்கள்

நானும் என்னுடன் இணைந்து பணியாற்றும் தேர்வாளர்களும் கூட்டாக மொத்தம் 13 டெஸ்ட் போட்டியில் தான் விளையாடி இருக்கிறோம் என்பது உண்மை தான். ஆனால் சர்வதேச போட்டி அனுபவத்தை மட்டும் பார்க்காதீர்கள். மற்ற நாடுகளின் தேர்வு குழுவினரையும் பாருங்கள். இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவராக இருக்கும் எட் சுமித் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழு தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்த டிரேவோர் 7 டெஸ்ட் போட்டியில் தான் விளையாடி இருந்தார். அவருக்கு கீழ் தான் 128 டெஸ்ட் மற்றும் 244 ஒருநாள் போட்டியில் ஆடிய மார்க் வாக்கும், 87 டெஸ்ட் மற்றும் 74 ஒருநாள் போட்டியில் விளையாடிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பலும் பணியாற்றினார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த நாடுகளில் எல்லாம் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் பார்க்கப்படுவதில்லை. நமது நாட்டில் தான் இந்த மாதிரி பேசுகிறார்கள்.

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த ராஜ்சிங் துங்கர்பூர் சர்வதேச போட்டியில் விளையாடியது கிடையாது. அவர் தான் 16 வயதில் தெண்டுல்கரை அணிக்கு தேர்வு செய்தார். சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் தேவை என்றால் முதல் தர போட்டியில் விளையாடிய நிறைய முன்னாள் வீரர்கள் இந்திய தேர்வாளராக வர ஒருபோதும் கனவு காண முடியாது. சிறந்த வீரரை அடையாளம் கண்டு தேர்வு செய்ய சர்வதேச போட்டி அனுபவம் மட்டும் போதாது. வித்தியாசமான நிபுணத்துவத்துடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். தேர்வு குழுவை நொண்டி வாத்து என்று கவாஸ்கர் விமர்சித்தது துரதிருஷ்டவசமானது. அவர் உள்பட முன்னாள் ஜாம்பவான்கள் மீது நாங்கள் நல்ல மரியாதை வைத்து இருக்கிறோம்.

அதிக வெற்றி

தேர்வு குழுவினர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உள்ளூர் போட்டிகளில் புதிய திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களது வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த வீரர்கள் இந்திய ‘ஏ’ மற்றும் சீனியர் அணியில் இடம் பிடிக்க வழிவகை செய்து வருகிறோம். எங்களது பதவி காலத்தில் நமது அணி 13 டெஸ்ட் போட்டி தொடரில் ஆடியதில் 11 தொடரை வென்றுள்ளது. நமது டெஸ்ட் அணி நீண்டநாட்களாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. ஒருநாள் போட்டியில் நமது அணி 80 முதல் 85 சதவீதம் வரை வெற்றி கண்டுள்ளது. நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தது. ஒருநாள் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 11 தொடரில் விளையாடி அனைத்திலும் தொடரை வென்று இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 9 தொடரில் விளையாடி 8–ல் வென்றுள்ளது. மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து 35 புதிய வீரர்களை அணிக்கு கொண்டு வந்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். ஆந்திராவை சேர்ந்த 44 வயதான எம்.எஸ்.கே.பிரசாத் 6 டெஸ்ட் போட்டியிலும், 19 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.


Next Story