கிரிக்கெட்

9 அணிகள், 27 தொடர்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடக்கம் விதிமுறை, புள்ளி பகிர்வு எப்படி இருக்கும்? + "||" + World Test Championship Competition Starting tomorrow

9 அணிகள், 27 தொடர்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடக்கம் விதிமுறை, புள்ளி பகிர்வு எப்படி இருக்கும்?

9 அணிகள், 27 தொடர்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடக்கம் விதிமுறை, புள்ளி பகிர்வு எப்படி இருக்கும்?
இரு நாட்டு தொடர் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாளை தொடங்குகிறது. இதில் 9 அணிகளின் முடிவுகள் கவனத்தில் கொள்ளப்படும்.

துபாய், 

இரு நாட்டு தொடர் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாளை தொடங்குகிறது. இதில் 9 அணிகளின் முடிவுகள் கவனத்தில் கொள்ளப்படும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது 50 ஓவர், 20 ஓவர் வடிவிலான உலக கோப்பை போட்டி போன்ற குறிப்பிட்ட இடத்தில் ஒரே காலக்கட்டத்தில் நடத்தப்படுவது அல்ல. இது இரு நாட்டு தொடரின் முடிவுகள் அடிப்படையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாகும்.

உலக சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடங்கி 2021–ம் ஆண்டு மார்ச் 31–ந்தேதி வரை நடைபெறும். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகளில் தரவரிசையில் டாப்–9 இடங்கள் வகிக்கும் இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றுள்ளது.

கிரிக்கெட்டில் 20 ஓவர் போட்டியில் அதிரடி ஆக்கிரமித்துள்ள இந்த காலக்கட்டத்தில் 142 ஆண்டு கால பழமையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் ஊட்டவும், விறுவிறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் டெஸ்ட் போட்டியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தவும், நீண்ட கால கனவான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஒரு வழியாக இறுதிவடிவம் பெற்று இருக்கிறது. இதன் விதிமுறைகள் மற்றும் புள்ளி விவரங்கள் வருமாறு:–

*இந்த 2 ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடும். ஒவ்வொரு தொடரையும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களே பரஸ்பர ஒப்பந்தங்கள் அடிப்படையில் நடத்தும். இறுதிப்போட்டியை நடத்தும் பொறுப்பை மட்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்றுக்கொள்ளும்.

*ஒவ்வொரு தொடரும் குறைந்தது 2 டெஸ்டும், அதிகபட்சமாக 5 டெஸ்டும் உள்ளடக்கியதாக இருக்கும்.

புள்ளிகள் வழங்குவது எப்படி?

*புள்ளிகள் வழங்குவது என்பது டெஸ்ட் போட்டி எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும். ஒவ்வொரு தொடருக்கும் அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும். இதன்படி இரண்டு டெஸ்ட் தொடர் என்றால் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிக்கும் 60 புள்ளிகளும், டையில் (சமன்) முடிந்தால் 30 புள்ளிகளும் வழங்கப்படும். 3–ல் ஒரு பங்கு என்ற அடிப்படையில் ‘டிரா’வுக்கு புள்ளி கொடுக்கப்படும். அதாவது 2 டெஸ்ட் கொண்ட தொடரில் ஒரு டிராவுக்கு 20 புள்ளிகள் கிடைக்கும்.

*5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட தொடர் என்றால் 120 புள்ளிகளை பிரித்து ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிக்கும் 24 புள்ளிகளும், டிராவுக்கு 8 புள்ளியும், ‘டை’க்கு 12 புள்ளிகளும் கிடைக்கும். இதே 3 போட்டி கொண்டதாக இருக்கும் பட்சத்தில் வெற்றி, டிரா, டை முறையே 40, 13.3, 20 வீதம் புள்ளிகள் வழங்கப்படும்.

* இந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 27 தொடர்களின் மூலம் 71 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு அணியும் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் அணிகளுக்கு எதிராக சில போட்டிகளும், பின்தங்கிய அணிகளுக்கு எதிராக சில போட்டிகளும் விளையாடும் வகையில் அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

*டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்கும், ஐ.சி.சி. தரவரிசை புள்ளிகளுக்கும் தொடர்பு கிடையாது. அணிகளின் தரவரிசை வழக்கம் போல் ஒவ்வொரு டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் வெளியிடப்படும்.

இந்திய தொடர்கள் எது?

*ஒவ்வொரு தொடரும் சம்பந்தப்பட்ட நாடுகளின் விருப்பத்தை பொறுத்தது. இந்த காலக்கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் (2 டெஸ்ட்), தென்ஆப்பிரிக்கா (3), ஆஸ்திரேலியா (4), இங்கிலாந்து (5), நியூசிலாந்து (2), வங்காளதேசம் (2) ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. பரம எதிரியான பாகிஸ்தானை வழக்கம் போல் இந்தியா ஓரங்கட்டியுள்ளது.

அதே சமயம் மேற்கண்ட காலக்கட்டத்தில் நடக்கும் எல்லா போட்டிகளுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டு வரும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக நவம்பர் மாதம் நடக்கும் இங்கிலாந்து–நியூசிலாந்து தொடர் ஐ.சி.சி.யின் வருங்கால சுற்றுப்பயணம் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதே தவிர, அது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

* 2 ஆண்டு போட்டி முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதி ஆட்டம் 2021–ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் அரங்கேறும்.

மெதுவாக பந்து வீசினால்...

*இறுதி ஆட்டம் சமனில் முடிந்தாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இரு அணிகளும் கூட்டாக சாம்பியன்ஷிப் கோப்பையை பெறும். ஆனால் மழையால் ஒரு சில நாட்கள் பாதிக்கப்பட்டால் நேரத்தை கணக்கிட்டு கூடுதலாக ஒரு நாள் ஒதுக்கப்படும்.

*மெதுவாக பந்து வீசும் அணிகளின் கேப்டன்களுக்கு தகுதி இழப்பு புள்ளி விதித்து அதன் மூலம் ஒரு சில போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டியின் முடிவில் எத்தனை ஓவர்கள் குறைவாக வீசப்படுகிறதோ அதற்கு ஏற்ப டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி குறைக்கப்படும். தாமதம் ஆகும் ஒவ்வொரு ஓவருக்கும் சம்பந்தப்பட்ட அணிகள் பெற்றிருக்கும் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் 2 வீதம் குறைக்கப்படும்.

*டி.வி. சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமை சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களுக்கே உரியது. இறுதிப்போட்டி ஒளிபரப்பு உரிமம் மட்டும் ஐ.சி.சி.யின் முடிவை சார்ந்தது.

*அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே (தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது) ஆகிய அணிகளின் டெஸ்ட் போட்டிகள், சாம்பியன்ஷிப்பில் இடம் பெறாது. ஆனால் இந்த அணிகளின் முடிவுகள் டெஸ்ட் தரவரிசையில் சேர்க்கப்படும்.

நாளை தொடக்கம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் நாளை (வெள்ளிக்கிழமை) பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பிக்கிறது.

இந்திய அணிக்குரிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணம், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தொடங்குகிறது. இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 22–ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே வீரர்களின் சீருடையில் எண்ணும், பெயரும் பொறிக்கப்பட்டு வந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் விதமாக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் சீருடையிலும் நம்பர் மற்றும் பெயர் இடம் பெறுகிறது.